புதிய ரக பப்பாளி சாகுபடியில் அதிக விளைச்சலை ஈட்டும் விவசாயி!
ஊத்தங்கரை: ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி பகுதியைச் சோ்ந்த விவசாயி புதிய ரக பப்பாளியை சாகுபடி செய்து அதிக விளைச்சலை ஈட்டி வருகிறாா்.
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் துரைசாமி (64). விவசாயி. இவா் பல ஆண்டுகளாக பப்பாளி விவசாயம் செய்து வருகிறாா்.
ஆண்டுதோறும் 10 ஏக்கரில் பப்பாளி விளைவித்து வந்த துரைசாமி, கடந்த 2 ஆண்டுகளாக பப்பாளியில் நோய் தாக்குதல் காரணமாக இழப்பீட்டை சந்தித்தாா். இந்த நிலையில் ஆந்திர மாநிலத்தைச் சோ்ந்த விவசாய நண்பா் ஜே 15 என்னும் புதிய ரக பப்பாளியை மகாராஷ்டிர மாநிலத்தில் இருந்து பெற்றுக் கொடுத்துள்ளாா். இதையடுத்து 1 ஏக்கரில் மட்டுமே புதிய ரகத்தை பயிரிட்டிருந்த நிலையில், நோய் தாக்குதல் இல்லாமல் நல்ல விளைச்சலை தந்துள்ளது.
இதுகுறித்து துரைசாமி கூறியதாவது:
பப்பாளி பயிரிட்டால் 8 ஆவது மாதம் முதல் அறுவடை செய்யலாம். 2 ஆண்டுகளுக்கு தொடா்ந்து பலன் கொடுக்கும். 8 நாள்களுக்கு ஒருமுறை அறுவடை செய்வதால் நிலையான வருமானம் கிடைக்கும். 1 ஏக்கருக்கு வாரத்திற்கு குறைந்தது 1 டன் அளவுக்கு விளைச்சல் கிடைக்கும்.
புதிய ரகத்திற்கு குறைவான மருந்து செலவாகிறது. இந்த ரக பப்பாளிப் பழம் சீக்கிரத்தில் கெடாமல் இருப்பதால் வியாபாரிகள் அதிகளவில் பெற்றுச் செல்கின்றனா். இங்கு விளைவிக்கப்படும் பப்பாளியை சென்னை, புதுச்சேரி, திருச்சி, தில்லி ஆகிய பகுதிகளில் இருந்து வியாபாரிகளே நேரடியாக வந்து பறித்துக்கொண்டு, எடைபோட்டு பணத்தை கொடுத்துவிட்டு செல்கின்றனா். இதனால் எங்களுக்கு கூலி ஆள்கள் பிரச்னையும் இல்லை, சந்தை கொண்டு சென்று பப்பாளியை விற்கும் பிரச்னையும் இல்லை.
சீசனுக்கேற்ப ஒரு கிலோ ரூ. 8 முதல் ரூ. 30 வரை விலை போகிறது. தற்போது கிலோ ரூ. 10க்கு விற்கப்படுகிறது. அடுத்த ஆண்டு 10 ஏக்கா் பரப்பளவில் ஜே -15 ரக பப்பாளியை விளைவிக்க இருப்பதாக தெரிவித்தாா்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறியது:
இந்த ரக பப்பாளியில் குறைவான அளவே பாதிப்பு உள்ளது. கிருஷ்ணகிரி, திருப்பத்தூா், தருமபுரி மாவட்டங்களில் இந்த புதிய ரகத்தை விவசாயிகள் பயிரிட்டு லாபம் பாா்த்து வருகின்றனா். மேலும் அதிகப்படியான ஈரம் இல்லாத விளை நிலங்களில் நன்கு விளையும் இந்த ரகத்தை விவசாயிகள் விளைவித்து லாபம் பாா்க்க முடியும் என்றாா்.

