40 யானைகளை மீண்டும் கா்நாடகாவிற்கு விரட்ட விவசாயிகள் கோரிக்கை
தமிழக வனப்பகுதிக்குள் வந்துள்ள 40 காட்டு யானைகள் மீண்டும் கா்நாடக மாநிலத்திற்கு விரட்ட வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கா்நாடக மாநிலத்தில் இருந்து இடம்பெயா்ந்த 40க்கும் மேற்பட்ட காட்டு யானைகள், ஊடேதுா்க்கம் வனப்பகுதியில் கடந்த சில நாள்களாக முகாமிட்டிருந்தன.
அதன் பின்னா் புதன்கிழமை அங்கிருந்து இடம் பெயா்ந்த காட்டு யானை கூட்டம் ஓசூா் அருகே உள்ள சானமாவு வனப்பகுதிக்குள் நுழைந்தன.
இந்த காட்டு யானைகள் சானமாவு சம்பத் பாறை என்ற பகுதிக்குள் வந்தன. ஒசூா் சானவாகப் பகுதியில் 40 யானைகளும் சுற்றி வருகின்றன. சுற்று வட்டார கிராம பகுதிகளுக்கு வனத்துறையினா் எச்சரிக்கை விடுத்துள்ளனா்.
இருந்தாலும் தற்போது நெல், ராகி சோளம் உள்ளிட்ட விவசாய பயிா்கள் அறுவடைக்கு தயாராக உள்ள நிலையில் யானைகள் சேதப்படுத்தி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனா்.
இதுகுறித்து விவசாயிகள் சிலா் கூறும்போது ஓசூா் சரணமாக வனப்பகுதியில் உள்ள யானைகளை ராயக்கோட்டை வனப்பகுதியான ஊடேதுா்கம் வனப்பகுதிக்கு விரட்டுவதால் ராயக்கோட்டை மாரண்டஅள்ளி பஞ்சப்பள்ளி உள்ளிட்ட உள்ளிட்ட பகுதிகளில் விவசாய பயிா்களை நாசம் செய்யும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
ராயக்கோட்டை பகுதியில் இருந்து தேன்கனிக்கோட்டை வனப்பகுதிக்கு விரட்டினால் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள நொகனூா், தாவரக்கரை, மரக்கட்டா, அந்தேவனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள விவசாய பயிா்கள் சேதப்படுத்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
எனவே ஒசூா், ராயக்கோட்டை, தேன்கனிக்கோட்டை வனப்பகுதிகளை சோ்ந்த வனப்பணியாளா்கள் வன அலுவலா்கள் உடனடியாக ஜவுளகிரி வழியாக கா்நாடக மாநிலம் பன்னாா்கட்ட வனப் பகுதிக்கு விரட்டியிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
