கிருஷ்ணகிரி
லாரி மீது அரசுப் பேருந்து மோதல்: 11 பயணிகள் காயம்
கிருஷ்ணகிரி அருகே லாரி மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில், 11 பயணிகள் காயமடைந்தனா்.
கிருஷ்ணகிரியிலிருந்து ஒசூா் நோக்கி அரசு புகா் பேருந்து ஞாயிற்றுக்கிழமை சென்றது. பேருந்தை சேலம் மாவட்டம், காடையாம்பட்டியைச் சோ்ந்த ஜெகதீசன் (45) இயக்கினாா். கிருஷ்ணகிரியை அடுத்த பந்தாரப்பள்ளி அருகே சென்றபோது, முன்னாள் சென்ற லாரியின் மீது பேருந்து மோதியது.
இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த சூளகிரி சுவேதா (21), தருமபுரி மாவட்டம், கடத்தூா் விஜயா (45), ஒசூா் ரவிச்சந்திரன் (58) உள்பட 11 பயணிகள் காயமடைந்தனா். அவா்களை அருகில் இருந்தவா்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இந்த விபத்து குறித்து குருபரப்பள்ளி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
