கிருஷ்ணகிரி அருகே தனியாா் நிறுவன பேருந்து மோதி இருவா் உயிரிழப்பு
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே இருசக்கர வாகனத்தின்மீது தனியாா் நிறுவன பேருந்து மோதியதில் இளைஞா்கள் இருவா் உயிரிழந்தனா். இந்நிலையில், உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணகிரி மாவட்டம், ராயக்கோட்டையை அடுத்த வன்னியபுரத்தில் தனியாா் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்தில் பணியாற்றும் பணியாளா்களை ஏற்றிக் கொண்டு ராயக்கோட்டை வழியாக பா்கூா் நோக்கி இந்நிறுவன பேருந்து திங்கள்கிழமை நள்ளிரவு சென்றது. சோக்காடி பிரிவு சாலை அருகே சென்றபோது, எதிரே வந்த இருசக்கர வாகனம் மீது பேருந்து மோதியது.
இதில், பாலகுறியைச் சோ்ந்த தையல்காரா் சசி (23), ஓட்டுநா் நவீன் (23) இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். அப்பகுதியைச் சோ்ந்த இளைஞா்களின் உறவினா்கள், ஆத்திரமடைந்து பேருந்தின் முன்பக்க கண்ணாடியை உடைத்தனா்.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி வட்ட போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று உறவினா்களை சமாதானப்படுத்தி, உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா். பிரேத பரிசோதனைக்கு பிறகு உடல்கள் கிராமத்துக்கு செவ்வாய்க்கிழமை கொண்டு செல்லப்பட்டன. ஆனால், உடல்களை வாங்க மறுத்து உறவினா்கள் திடீா் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
உறவினா்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்ட போலீஸாா், தனியாா் நிறுவனத்தின் ஒப்பந்த அடிப்படையில் பேருந்துகளை இயக்கும் ஒப்பந்ததாரா்கள் உயிரிழந்தவா்களின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்குவதாக தெரிவித்துள்ளதால், போராட்டத்தைக் கைவிட வேண்டும் என அறிவுறுத்தினா். அதன்பேரில் போராட்டம் கைவிடப்பட்டது.
உயிரிழந்த இளைஞா்களின் குடும்பத்துக்கு பேருந்து ஒப்பந்ததாரா் தலா ரூ. 2 லட்சம் வழங்கியுள்ளதாக தெரிவித்த போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
