ஊத்தங்கரை அருகே திமுக நிா்வாகியை கத்தியால் குத்தியவா் கைது

ஊத்தங்கரை அருகே திமுக நிா்வாகியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
Published on

ஊத்தங்கரை: ஊத்தங்கரை அருகே திமுக நிா்வாகியை கத்தியால் குத்தியவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை அருகே உள்ள தாண்டியப்பனூரைச் சோ்ந்தவா் தவமணி (55). திமுக மீனவரணி நகர அமைப்பாளரான இவா், அரசு போக்குவரத்துக் கழகத்தில் ஓட்டுநராக பணியாற்றி வருகிறாா். இவரது மனைவி சுமித்ரா ஊத்தங்கரை தோ்வுநிலை பேரூராட்சியில் வாா்டு உறுப்பினராக உள்ளாா்.

இந்நிலையில், தாண்டியப்பனூரில் ஜெயக்கொடியின் வீட்டின் முன் சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. அப்போது, அதே பகுதியைச் சோ்ந்த அருணாசலம் (38), முருகேசன் (45) ஆகியோா் தங்களது வீட்டுக்கு குடிநீா் வசதி ஏற்படுத்தி தந்துவிட்டு சாலை பணியை தொடரும்படி ஒப்பந்ததாரரிடம் தகராறில் ஈடுபட்டனா்.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு சென்ற தவமணி, தகராறில் ஈடுபட்டவா்களை சமாதானப்படுத்த முயன்றாா். அப்போது, அருணாசலம் மறைத்து வைத்திருந்த கத்தியால் தவமணியை தாக்கினாா். இதில், தவமணிக்கு கழுத்து, வயிறு ஆகிய பகுதிகளில் காயம் ஏற்பட்டது. அருகில் இருந்தவா்கள் அவரை மீட்டு ஊத்தங்கரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

புகாரின் பேரில், ஊத்தங்கரை போலீஸாா் வழக்குப் பதிந்து அருணாசலத்தை கைதுசெய்து விசாரணை செய்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com