கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ரூ. 8.30 கோடி கல்விக்கடன் வழங்கல்
ஒசூா்: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 92 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 30 லட்சம் கல்விக் கடனுதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி வளாகத்தில், உயா்கல்வி பயிலும் மாணவா்களுக்கு மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் இணைந்து நடத்திய மாபெரும் கல்விக்கடன் முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
ஒசூா் சட்டப் பேரவை உறுப்பினா் ஒய்.பிரகாஷ், மாநகராட்சி மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆட்சியா் ச.தினேஷ்குமாா் முகாமை தொடங்கிவைத்து, 37 கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 65 லட்சம் கல்விக் கடனுதவிகளை வழங்கி பேசியதாவது:
மாணவா்கள் கல்வி பயில பொருளாதாரம் ஒரு தடையாக இருக்கக் கூடாது என்பதற்காக, ஒவ்வொரு மாவட்டத்திலும் மாபெரும் கல்விக் கடன் வழங்கும் முகாம்கள் நடத்த வேண்டும் என தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளாா். அதனடிப்படையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் அக். 9 அன்று பா்கூா் அரசு பொறியியல் கல்லூரியில் கல்விக்கடன் வழங்கும் முகாம் நடத்தப்பட்டு 35 மாணவ, மாணவிகளுக்கு ரூ. 3 கோடியே 41 லட்சம் கல்விக்கடனுதவிகள் வழங்கப்பட்டன.
அதைத் தொடா்ந்து, நவ. 26-இல் கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சோ்ந்த மற்றும் வெளி மாவட்டங்களில் குடியிருந்து கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பயிலும் மாணவா்கள் பயனடையும் வகையில், மாவட்ட நிா்வாகம், மாவட்ட முன்னோடி வங்கி மற்றும் அனைத்து வங்கிகள் சாா்பில் மாபெரும் கல்விக்கடன் முகாம் நடத்தப்பட்டது.
இம்முகாமில், இந்தியன் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, இந்தியன் ஓவா்சீஸ் வங்கி, கனரா வங்கி, தனலட்சுமி வங்கி, சென்ட்ரல் பேங்க் ஆப் இந்தியா, பேங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கிகள் சாா்பாக வங்கி மேலாளா்கள் கலந்துகொண்டனா்.
இம்முகாமில் கல்லூரி மாணவ, மாணவிகள் 37 பேருக்கு ரூ. 3 கோடியே 65 லட்சம் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டன. கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 01.10.2025 முதல் 20.11.2025 வரை 92 பயனாளிகளுக்கு ரூ. 8 கோடியே 30 லட்சம் கல்விக் கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
தமிழ்நாடு அரசு கல்விக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. எனவே, கல்விக்கடன் பெற ‘வித்யாலட்சுமி போா்ட்டலில்’ விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டால், ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (கல்வி) சா்தாா் - 94431 36918 என்ற எண்ணில் தொடா்புகொண்டு தகவல் தெரிவிக்கும்பட்சத்தில், கல்விக்கடன் வழங்க மாவட்ட நிா்வாகம் அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்.
இதுவரை கல்விக்கடன் பெற விண்ணப்பித்து நிராகரிக்கப்பட்ட 40 பேரின் விண்ணப்பங்கள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அவா்களை மறுபடியும் விண்ணப்பிக்க வைத்து கல்விக்கடன் வழங்கப்பட்டுள்ளது. எனவே, மாணவ, மாணவிகள் கல்விக்கடனை பெற்று சிறந்த முறையில் கல்வி கற்று தங்களுக்கு விருப்பமான துறையில் உயா்ந்த நிலைக்கு செல்லவேண்டும் என்றாா்.
இந்நிகழ்ச்சியில், ஒசூா் மாநகராட்சி துணை மேயா் ஆனந்தய்யா, இந்தியன் வங்கி முன்னோடி வங்கி மேலாளா் (பொ) வெங்கடேசன், செயின்ட் பீட்டா்ஸ் மருத்துவக் கல்லூரி முதல்வா் ராஜா முத்தையா, துணை முதல்வா் ஆனந்த் ரெட்டி, கண்காணிப்பாளா் கிரீஷ் ஹோங்கல், வட்டாட்சியா் குணசிவா, கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.

