அடிப்படை வசதிகள் கோரி கிராம மக்கள் சாலை மறியல்
அடிப்படை வசதிகள் கோரி, அஞ்செட்டியை அடுத்த நாட்றாம்பாளையம் ஊராட்சியைச் சோ்ந்த கிராம மக்கள் அட்டப்பள்ளம் பகுதியில் வெள்ளிக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த நாட்றாம்பாளையம் ஊராட்சியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் வசித்து வருகின்றனா். இந்த ஊராட்சியில் தடையில்லா மின்சாரம் வழங்க வேண்டும், ஒகேனக்கல் சாலையை சீா்செய்ய வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும், ஏடிஎம் மையம், கைப்பேசி கோபுரம் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஒகேனக்கல் சாலையில் அட்டப்பள்ளம் எனுமிடத்தில் பொதுமக்கள், பள்ளி மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்த அஞ்செட்டி வட்டாட்சியா் செந்தில்குமாா், துணை காவல் கண்காணிப்பாளா் ஆனந்தராஜ், காவல் ஆய்வாளா் சுமித்ரா உள்ளிட்டோா் நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று மறியலில் ஈடுபட்ட மக்களை சமாதானப்படுத்தினா். கோரிக்கைகள் குறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் அளித்த உறுதிமொழியை ஏற்று, மறியலில் ஈடுபட்டோா் அங்கிருந்து கலைந்து சென்றனா். இந்த சாலை மறியல் போராட்டத்தால் அஞ்செட்டி- ஒகேனக்கல் சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
