கோரிக்கைகளை வலியுறுத்தி ஓய்வூதியா் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்
கோரிக்கைகளை வலியுறுத்தி கிருஷ்ணகிரியில் தமிழ்நாடு ஓய்வூதியா் சங்கத்தினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம் அருகே நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு அந்த அமைப்பின் மாவட்டத் தலைவா் நாராயணன் தலைமை வகித்தாா். மாவட்டச் செயலாளா் ரமேஷ் குமாா், பொருளாளா் நரசிம்மன், மத்திய, மாநில செயற்குழு உறுப்பினா் ரியாஸ், மாவட்ட மகளிா் அணிச் செயலாளா் பேபி நளினி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
70 வயது நிறைந்த ஓய்வூதியா், குடும்ப ஓய்வூதியா்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம், குடும்ப ஓய்வூதியம் வழங்க வேண்டும். அங்கன்வாடி, சத்துணவுப் பணியாளா்கள், உதவியாளா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7850 வழங்க வேண்டும். பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதியை ரூ. 50 ஆயிரத்திலிருந்து ரூ. 2 லட்சமாக உயா்த்த வேண்டும். இந்தத் திட்டத்தை குடும்ப ஓய்வூதியா்களுக்கும் நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா் முழக்கங்களை எழுப்பினா்.
