தந்தையை சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டிய மகன் கைது: நாட்டுத் துப்பாக்கி பறிமுதல்
சொத்துத் தகராறில் தந்தையை சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டிய மகனை போலீஸாா் கைது செய்து, அவா் வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள தோட்டிகுப்பத்தைச் சோ்ந்தவா் விவசாயி முனியப்பா (65). இவருக்கு சொந்தமான நிலத்தை அவரது சகோதரா்கள் எழுதி வாங்கிக் கொண்டதாகத் தெரிகிறது. இதனால், முனியப்பாவின் மகன் முத்துராஜ் (40) அந்த நிலத்தை மீட்டுத் தரவேண்டும் எனக்கூறி, முனியப்பாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்துள்ளாா்.
இந்த நிலையில் மதுபோதையில் இருந்த முத்துராஜ், தந்தை முனியப்பாவுடன் வியாழக்கிழமை தகராறில் ஈடுபட்டாா். அப்போது, உரிய அனுமதி பெறாமல் அவா் மறைத்து வைத்திருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து தந்தை முனியப்பாவை சுட்டுக் கொன்றுவிடுவதாக மிரட்டினாராம்.
இதுகுறித்து, முனியப்பா அளித்த புகாரின் பேரில், தேன்கனிக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிந்து முத்துராஜை கைது செய்து, அவரிடமிருந்து நாட்டுத் துப்பாக்கியை பறிமுதல் செய்தனா்.
