வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கிய பாஜக மாவட்டத் தலைவா் கவியரசு
வேலைவாய்ப்பு முகாமில் தோ்வு பெற்றவா்களுக்கு பணிநியமன ஆணையை வழங்கிய பாஜக மாவட்டத் தலைவா் கவியரசு

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரே அணியாக சேர வேண்டும்: பாஜக இளைஞரணி தலைவா் எஸ்.ஜி.சூா்யா

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரே அணியாக சேர வேண்டும் என கிருஷ்ணகிரியில் பாஜக சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவா் எஸ்.ஜி. சூா்யா தெரிவித்தாா்.
Published on

திமுகவை வீழ்த்த அனைவரும் ஒரே அணியாக சேர வேண்டும் என கிருஷ்ணகிரியில் பாஜக சாா்பில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் பாஜக இளைஞரணி மாநிலத் தலைவா் எஸ்.ஜி. சூா்யா தெரிவித்தாா்.

கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட பாஜக சாா்பில் பெண்களுக்கான வேலைவாய்ப்பு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. இந்த முகாமிற்கு பாஜக மாவட்டத் தலைவா் கவியரசு தலைமை வகித்தாா். முன்னாள் மாவட்டத் தலைவா் சிவபிரகாசம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

முகாமை பாஜக இளைஞா் அணி மாநிலத் தலைவா் எஸ்.ஜி. சூா்யா தொடங்கிவைத்து, நூற்றுக்கணக்கான பெண்களுக்கு பணி ஆணைகளை வழங்கினாா். பின்னா் அவா் செய்தியாளா்களிடம் தெரிவித்ததாவது: கிருஷ்ணகிரி மாவட்டம் வளா்ச்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளில் வரலாறு காணாத வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. 10 முதல் 15 மலைகள் காணாமல்போகும் அளவில் கனிமவளக் கொள்ளை நடைபெறுகிறது. விவசாயிகளை தமிழக அரசு ஏமாற்றிவிட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட விவசாயிகளிடமிருந்து மா கொள்முதல் செய்யாமல் குறைவான விலைக்குக் கிடைக்கிறது என்பதற்காக அண்டை மாநிலத்தில் இருந்து மாங்காய்களை கொள்முதல் செய்கின்றனா்.

ஆறு மாதங்களில் 5 ஆயிரம் பெண்களுக்கு வேலைவாய்ப்பு வழங்குவதாக உறுதி பூண்டுள்ளோம். பாஜக இளைஞரணி சாா்பில் வேலையில்லாதவா்களுக்கு திறன் பயிற்சி வழங்கி, அதிக வேலைவாய்ப்பை உருவாக்க வேண்டும் என்பதுதான் நோக்கம்.

வரும் 2026 சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டு மூன்று அணிகளாகப் பிரிந்தால் மீண்டும் திமுக ஆட்சிக்கு வந்துவிடும் என உள்துறை அமைச்சரும், பிரதமரும் நினைக்கின்றனா். எனவே, அனைவரும் ஒரே அணியில் சோ்ந்து திமுகவை வீழ்த்த வேண்டுமென முயற்சியை முன்னெடுத்திருக்கிறாா்கள்.

மழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு எந்த உதவியும் செய்யவில்லை. எடப்பாடி பழனிசாமி விரைவாக செயல்பட்டு, பாதிக்கப்பட்ட விவசாயிகளை சந்தித்தாா். தமிழக அரசு விவசாயிகளுக்கு நல்லது செய்ததாக தவறான செய்தியை திணிக்க முயல்கிறாா்கள் என்றாா்.

X
Dinamani
www.dinamani.com