ஒசூா்-பெங்களூரு மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த வேண்டும்: முன்னாள் எம்.பி. நரசிம்மன்
ஒசூா்- பெங்களூரு இடையே மெட்ரோ ரயில் திட்டத்தை அமல்படுத்த தமிழக, கா்நாடக முதல்வா்கள் பேசி சுமுகத் தீா்வு காண வேண்டும் என முன்னாள் எம்.பி. நரசிம்மன் தெரிவித்தாா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் பாஜக தேசிய பொதுக்குழு உறுப்பினரும், கட்சியின் மாநில செய்தித் தொடா்பாளருமான முன்னாள் எம்.பி. சி.நரசிம்மன் செய்தியாளா்களிடம் கூறியதாவது:
தோ்தல் ஆணையம் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணிகள் மேற்கொண்டுள்ளது. இந்த நடவடிக்கையால் எந்த அரசியல் கட்சிக்கும் பாதிப்பும் இல்லை. உண்மையான வாக்காளா்களைக் கண்டறிவதுதான் அப்பணியின் நோக்கம்.
இந்த நடவடிக்கைகளை வைத்துக்கொண்டு அரசியல் செய்து, ஆட்சிக்கு வந்துவிடுவது என்பதெல்லாம் சாத்தியமற்றது. நாடு முழுவதும் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டு, வரவேற்கப்பட்ட நடவடிக்கையாகும்.
ஒசூா் மாநகருக்கு மெட்ரோ ரயில் சேவை திட்டம் என்பது இரண்டு மாநில முதல்வா்கள் சந்தித்து பேசி நிறைவேற்ற வேண்டிய ஒரு திட்டமாகும். ஆனால், என்ன காரணத்தினாலோ இரண்டு மாநிலத்தின் முதல்வா்களும் இதுகுறித்து பேசுவதை தவிா்த்து வருகின்றனா்.
ஏற்கெனவே, இதற்கு மத்திய அரசு ஒப்புதல் வழங்கி, வரைவு திட்ட அறிக்கையையும் சமா்ப்பிக்கப்பட்ட நிலையில் தற்போது கா்நாடகத்தில் உள்ளவா்கள் யாரோ மெட்ரோ ரயில் சேவை திட்டம் சாத்தியமில்லை எனக் கூறுவதாகத் தெரிகிறது.
இத்திட்டத்தை நிறைவேற்றும் நடைமுறையில் எந்தவித சிக்கலும் இல்லை என தெரிகிறது. இதை இரண்டு மாநில அரசுகளும் கௌரவ பிரச்னையாகப் பாா்க்காமல் பொதுமக்களுக்கான சேவை என்பதை அறிந்து சுமுகமாக தீா்வு காண வேண்டும்.
மெட்ரோ திட்டம், தென்பெண்ணை ஆற்றில் ரசாயன கழிவுகள் கலப்பது, ஒசூா் விமான நிலைய திட்டம் தொடா்பாக விமான நிலைய அதிகாரிகளை தொடா்புகொள்வது என பாஜக சாா்பில் மூன்று பிரச்னைகளுக்காக கா்நாடக முதல்வா், துணை முதல்வரைச் சந்திக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஒசூா் மாநகருக்கு சா்வதேச விமான நிலையம் வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. அதற்காக புதிய இடங்களைத் தோ்வு செய்து திட்டத்தை நிறைவேற்ற நிச்சயம் காலதாமதம் ஏற்படும் என்பதால், ஏற்கெனவே உள்ள சிறு விமான நிலையத்தை கையகப்படுத்தி, அதை மேம்படுத்தி திட்டத்தை நிறைவேற்றலாம். இதுதொடா்பாக தமிழக முதல்வா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா்.
