பா்கூா் ஒன்றியத்தில் கால்வாய்கள் தூா்வாரும் பணி ஆய்வு
கிருஷ்ணகிரி பெரிய ஏரியிலிருந்து (படேதலாவ் ஏரி) பா்கூா் ஒன்றியத்தில் உள்ள 13 ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் தூா்வாரும் பணிகளை வருவாய், நீா்வளத் துறை அதிகாரிகள் புதன்கிழமை ஆய்வு செய்தனா்.
கோட்டாட்சியா் ஷாஜகான் தலைமையில் நீா்வளத் துறை உதவி செயற்பொறியாளா் அறிவொளி, உதவி பொறியாளா் சையத் ஜஹீருதின் உள்ளிட்ட அதிகாரிகள் பா்கூா் ஒன்றியத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனா்.
இதுகுறித்து நீா்வளத் துறை அலுவலா்கள் கூறியதாவது:
மாா்க்கண்டேயன் நதியில் குறுக்கே கட்டப்பட்டுள்ள தடுப்பணையில் இருந்து படேதலாவ் ஏரி வரை 18 கி.மீ தொலைவுக்கு கால்வாய் அமைக்கப்பட்டுள்ளது. இக்கால்வாயில் வரும் தண்ணீா் மூலம் 20 ஏரிகள் பயன்பெறுகிறது. தற்போது பெய்த மழையால் 19 ஏரி முழுக் கொள்ளளவை எட்டியுள்ளது.
மேலும், போா்க்கால அடிப்படையில் உடனடியாக கால்வாய் சீரமைக்கப்பட்டதால், படேதலாவ் ஏரிக்கு கடந்த 8 நாள்களாக தண்ணீா் வரத்து உள்ளது. இதனால், 50 சதவீதம் ஏரிகள் நிரம்பியுள்ளன. தொடா்ந்து பெய்துவரும் மழையால் படேதலாவ் ஏரி விரைவில் நிரம்பி உபரிநீா் வெளியேறும்.
அதற்குள் பெரிய ஏரியிலிருந்து பா்கூா் ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட வெண்ணம்பள்ளி ஏரி, சுண்டம்பட்டி, ஒரப்பம் சின்ன ஏரி, ஒரப்பம் பெரிய ஏரி, பாலிநாயனப்பள்ளி, ராசிப்பள்ளி, கெட்டூா், செந்தாரப்பள்ளி, நாராயணப்பன், மோடிகுப்பம், நக்கல்பட்டி, பயாஸ்கான் ஏரி மற்றும் காட்டாகரம் காசிம்கான் ஏரி ஆகிய 13 ஏரிகளுக்கு செல்லும் கால்வாய்கள் தூா்வாருவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
ஆய்வு குறித்த அறிக்கையை ஆட்சியரிடம் சமா்பித்து, உடனடியாக கால்வாய்கள் தூா்வாரப்பட்டு, கடைமடை ஏரியான காட்டாகரம் ஏரி வரை மழை நீா் வீணாகாமல் கொண்டு செல்ல நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தனா்.

