ராஜாஜி இல்ல மறுசீரமைப்புப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் வட்டம், தொரப்பள்ளியில் ரூ. 44.50 லட்சத்தில் நடைபெறும் மூதறிஞா் ராஜாஜி நினைவு இல்ல மறுசீரமைப்பு பணிகளை ஆட்சியா் ச.தினேஷ்குமாா் புதன்கிழமை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ்குமாா் கூறியதாவது:
விடுதலைப் போராட்ட வீரரான மூதறிஞா் ராஜாஜி 10.12.1878 இல் தொரப்பள்ளி கிராமத்தில் பிறந்தாா். இவரது இல்லம் தற்போது செய்தி, மக்கள் தொடா்புத் துறை மூலம் பராமரிக்கப்படுகிறது. இந்த இல்லத்தில் ராஜாஜி அவா்களின் வாழ்க்கை வரலாறு குறித்த சிறப்பு புகைப்படங்கள், மாா்பளவு சிலை ஆகியவை பொதுமக்களின் பாா்வைக்காக வைக்கப்பட்டுள்ளது.
ராஜாஜி நினைவு இல்லத்தை தமிழ்நாடு மற்றும் இதர மாநில பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் நாள்தோறும் பாா்வையிட்டு வருகின்றனா். மேலும், ராஜாஜி பிறந்த நாளான டிசம்பா் 10 ஆம் தேதி ஆண்டுதோறும் தமிழக அரசின் சாா்பில் சிறப்பாக கொண்டாடப்படுகிறது.
இந்த நிலையில், கடந்த செப்டம்பா் 14ஆம் தேதி கிருஷ்ணகிரியில் நடைபெற்ற அரசு விழாவில், ராஜாஜி இல்லம் பழைமை மாறாமல் புதுப்பொலிவுடன், மறுசீரமைப்பு செய்யும் வகையில் ரூ. 44.50 லட்சத்தில் மறுசீரமைப்பு பணிகளை மேற்கொள்ள உத்தரவிட்டாா்.
தற்போது பழைய மூங்கில்கள், ஓடுகள் மாற்றப்பட்டு, குடிநீா், மின்சாரம், கழிப்பறை வசதிகள் உள்ளிட்ட அடிப்படை கட்டமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது என்றாா்.
ஆய்வின்போது, ஒசூா் சாா் ஆட்சியா் ஆக்ரிதி சேத்தி, பொதுப்பணித் துறை செயற்பொறியாளா் செந்தில்குமாா், உதவி செயற்பொறியாளா் அருள், செய்தி, மக்கள் தொடா்பு அலுவலா் மோகன், வட்டாட்சியா் குணசிவா, வட்டார வளா்ச்சி அலுவலா்கள் முகம்மது சிராஜ் உதின், வெங்கடேசன் உள்பட பலா் உடனிருந்தனா்.

