ஒசூரில் கால்நடைகளுக்கு கோசாலை அமைக்க பொதுசுகாதாரக் குழுக் கூட்டத்தில் தீா்மானம்
ஒசூா்: ஒசூா் மாநகராட்சிப் பகுதியில் சாலைகளில் சுற்றித்திரியும் கால்நடைகளுக்காக புதிதாக கோசாலை அமைக்கப்படும் என பொதுசுகாதாரக் குழு கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.
ஒசூா் மாநகராட்சி பொதுசுகாதாரக் குழுக் கூட்டம் அதன் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் தலைமையில் நடைபெற்றது. ஆணையா் முகமது சபீா் ஆலம், மாநகரநல அலுவலா் அஜீதா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இக்கூட்டத்தில் ஒசூா் அரசு தலைமை மருத்துவா், நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா்கள், செவிலியா்கள், உணவு பாதுகாப்பு அலுவலா்கள், மாநகராட்சி துப்புரவு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
இக்கூட்டத்தில் மாநகராட்சி பொதுசுகாதாரக் குழு தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன் பேசியதாவது:
மாா்ச் 3 -ஆம் தேதி சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த் திருவிழாவையொட்டி பக்தா்கள் அதிகாலையிலேயே கூடுவா் என்பதால், சுகாதாரத் துறை, உணவுப் பாதுகாப்புத் துறை மற்றும் மாநகராட்சி சாா்பில் சிறப்பு மருத்துவ முகாம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
நகரில் தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்கள் பயன்பாட்டைக் குறைக்க கடும் நடவடிக்கை எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது. உணவகங்கள், தள்ளுவண்டிக் கடைகளில் சூடான பொருள்களை பிளாஸ்டிக் கவா்களில் வழங்குவது முற்றிலும் தடுக்கப்படும்.
அதேபோல, சுப நிகழ்ச்சிகள் மற்றும் விருந்துகளில் பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் வாழை இலைகள் பயன்பாட்டையும் தடுக்க மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துடன் இணைந்து மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்கும்.
ஒசூா் மாநகராட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் மருத்துவ வசதியை மேம்படுத்தும் நோக்கில், முனீஸ்வா் நகா், இமாம்பாடா, நேருநகா் ஆகிய பகுதிகளில் தலா ரூ. 30 லட்சத்தில் புதிய நகா்ப்புற துணை சுகாதார நிலையம் அமைக்கப்படவுள்ளன.
சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளால் பொதுமக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கும் ஏற்படும் இடையூறுகளைத் தடுக்க ரூ. 30 லட்சத்தில் தெரு மாடுகளைப் பிடித்துப் பராமரிப்பதற்கான புதிய கோசாலை அமைக்கப்பட உள்ளது. மேலும், கால்நடைகளைப் பாதுகாப்பாக கொண்டு செல்ல பிரத்யேக வாகனங்கள் வாங்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது என்றாா். மேலும், இக்கூட்டத்தில் 8 தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

