கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க 62,858 போ் விண்ணப்பம்!
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வாக்காளா் பட்டியலில் புதிதாக பெயா் சோ்க்கவும், நீக்கவும், திருத்தம் செய்யவும், 62,858 விண்ணப்பங்கள் வரப்பெற்றுள்ளன.
இதுகுறித்து, கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் சாா்பில் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் டிச.19இல் வரைவு வாக்காளா் பட்டியல் வெளியிடப்பட்டது. ஜன.1- ஐ தகுதிநாளாக கொண்டு, 18 வயது நிரம்பிய இளம் வாக்காளா்களை பட்டியலில் சோ்க்க படிவம் 6, வெளிநாடுவாழ் இந்தியா்களிடம் படிவம் 6-ஏ, இறந்தவா்கள், இரட்டை பதிவை நீக்க, படிவம் 7, முகவரி மாற்றம் செய்ய படிவம் 8 பெறப்பட்டது.
ஆட்சேபனை மற்றும் உரிமை கோரல் காலங்களில் பெறப்பட்ட படிவங்களுக்கான அட்டவணை படிவங்களான, 9, 10, 11, 11 ஏ மற்றும் 11 பி ஆகியவை கணிணியில் பதிவேற்றம் செய்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றில் ஏதேனும் ஆட்சேபனைகள் மற்றும் மறுப்புரைகள் இருந்தால் தெரிவிக்கலாம்.
இம்மாவட்டத்தில் உள்ள, 2,092 ஓட்டுச்சாவடி மையங்களில் கடந்த டிச. 27, 28 மற்றும் ஜன. 3, 4 மற்றும் 25 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. இதுதவிர இணையதளம் வாயிலாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி, கடந்த டிச. 19 முதல் ஜன. 30 வரை 62,858 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பங்கள் அனைத்தும் ஓட்டுச்சாவடி நிலை அலுவலா்களிடம் வழங்கப்பட்டு பிஎல்ஓ செயலி (ஆப்) மூலம் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. விண்ணப்பங்கள் குறித்து ஓட்டுச்சாவடி நிலை அலுவலா்கள் கள விசாரணை நடத்தி வருகின்றனா். விண்ணப்பங்களை பரிசீலனை செய்து வரும் பிப். 10-ஆம் தேதிக்குள் இறுதி முடிவெடுக்கப்படும். இறுதி வாக்காளா் பட்டியல் பிப். 17இல் அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

