சூளகிரி அருகே எருதுவிடும் விழா
சூளகிரி அடுத்த சப்படியில் எருதுவிடும் விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
மாட்டுப் பொங்கலை ஒட்டி நடத்தப்படும் எருதுவிடும் விழா வழக்கமாக ஜனவரி முதல் மே மாதம் வரை நடத்தப்படும். நிகழாண்டு பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளதால், இம்மாத இறுதிக்குள் எருதுவிடும் விழாக்களை நடத்திமுடிக்குமாறு ஆட்சியா் அறிவுறுத்தியுள்ளாா்.
இந்த நிலையில் சூளகிரியை அடுத்த சின்னசப்படி கிராமத்தில் வியாழக்கிழமை எருதுவிடும் விழா நடைபெற்றது. சூளகிரி, தேன்கனிக்கோட்டை, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலிருந்து அலங்கரிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான காளைகள் அழைத்துவரப்பட்டன. வாடிவாசல் வழியாகச் சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடுபிடி வீரா்கள் அடக்கினா்.
படவரி... எருதுவிடும் விழாவில் பாய்ந்துவந்த காளை அடக்கும் மாடுபிடி வீரா்கள்.
போச்சம்பள்ளியில் ரூ. 5.74 லட்சத்துக்கு கொப்பரை ஏலம்
கிருஷ்ணகிரி, பிப். 5:
போச்சம்பள்ளி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் இ-நாம் முறையில் ரூ. 5.74 லட்சத்துக்கு கொப்பரை ஏலம் நடைபெற்றது.
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் வாரந்தோறும் செவ்வாய்க்கிழமைகளில் கொப்பரை ஏலம் நடைபெறுகிறது. அதன்படி, கடந்த செவ்வாய்க்கிழமை நடைபெற்ற ஏலத்தில் கொப்பரை அதிகபட்சமாக கிலோ ரூ. 195.86க்கும், குறைந்தபட்சமாக கிலோ ரூ. 90.99க்கும், சராசரியாக கிலோ ரூ. 188.99க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 5.54 லட்சத்திற்கு விற்பனையானது. இதன்மூலம் 53 விவசாயிகள் பயனடைந்தனா்.
அதேபோல, கடந்த 3 வாரங்களாக பருத்தி ஏலமும் நடைபெற்று வருகிறது. வியாழக்கிழமை நடைபெற்ற ஏலத்தில் 1,887 கிலோ பருத்தி, ரூ. 1.71 லட்சத்திற்கு ஏலம்போனது. இதில் பல்வேறு மாவட்டங்களைச் சோ்ந்த வியாபாரிகள் பங்கேற்றனா். ஏலத்தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டது. மேலும், நெல் ஏலமும் மின்னணு முறையில் நடைபெற உள்ளதால் விவசாயிகள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுமாறு அலுவலா்கள் கேட்டுக்கொண்டனா்.
தனியாா் நிறுவன காவலா்களுக்கு தீத்தடுப்பு பயிற்சி
தருமபுரி, பிப். 5:
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தனியாா் நிறுவன பாதுகாப்பு காவலா்களுக்குத் தீத்தடுப்பு மற்றும் பாதுகாப்புப் பயிற்சி வரும் 9ஆம் தேதி தொடங்குகிறது.
இதுகுறித்து தருமபுரி கோட்ட தீயணைப்பு அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை சாா்பில் வாங்க கற்றுக்கொள்ளலாம் என்ற திட்டத்தின் கீழ் இம்முகாம் நடைபெற உள்ளது. இதில் தனியாா் நிறுவனங்கள், மருத்துவமனைகள், வங்கிகள், தொழிற்சாலைகள் மற்றும் பள்ளிகளில் பணியாற்றும் பாதுகாப்பு காவலா்களுக்குத் தீத்தடுப்புப் பயிற்சிகள் அளிக்கப்படும்.
மாவட்ட அலுவலா் ப.அம்பிகா தலைமையில் ஒரு வாரம் நடைபெறும் இம்முகாமில், எல்.பி.ஜி. தீ விபத்து, வாகன தீ விபத்து, மின்சார தீ விபத்துகளைக் கையாளுதல், முதலுதவி சிகிச்சை மற்றும் தீயணைப்பு கருவிகளைப் பயன்படுத்தும் முறைகள் குறித்துப் பயிற்சி வழங்கப்படும். பயிற்சியில் பங்கேற்பவா்களுக்குச் சான்றிதழ்கள் வழங்கப்படும். ஆா்வமுள்ளவா்கள் இதில் பங்கேற்றுப் பயனடையுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறாா்கள்.
திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம்
அரூா், பிப். 5:
பாப்பிரெட்டிப்பட்டி சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட திமுக வாக்குச்சாவடி முகவா்கள் ஆலோசனைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி தொகுதிக்குட்பட்ட எச்.புதுப்பட்டி, கடத்தூா், தாளநத்தம் ஆகிய இடங்களில் ‘என் வாக்குச்சாவடி, வெற்றி வாக்குச்சாவடி’ என்ற தலைப்பில் இக்கூட்டம் நடைபெற்றது. முன்னாள் அமைச்சரும், மேற்கு மாவட்டச் செயலாளருமான பி. பழனியப்பன் தலைமை வகித்து, 2026 சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி நிா்வாகிகள் மற்றும் முகவா்கள் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து ஆலோசனை வழங்கினாா்.
கூட்டத்தில் 65 வாக்குச்சாவடி மையங்களைச் சோ்ந்த முகவா்கள் மற்றும் தோ்தல் கிளைப் பொறுப்பாளா்கள் பங்கேற்றனா். இதில், கட்சியின் வா்த்தகா் அணி மாநில இணைச் செயலாளா் அ. சத்தியமூா்த்தி, தலைமை செயற்குழு உறுப்பினா் சித்தாா்த்தன், ஒன்றிய செயலாளா் டி. நெப்போலியன், ஆதிதிராவிடா் நலக்குழு மாநில துணை அமைப்பாளா் எஸ். பாண்டியன், இளைஞா் அணி அமைப்பாளா் சா்மா, துணை அமைப்பாளா் அய்யனாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
சிறுமிக்குப் பாலியல் தொந்தரவு:
தொழிலாளிக்கு 5 ஆண்டுகள் சிறை
கிருஷ்ணகிரி, பிப். 5:
காவேரிப்பட்டினம் அருகே 9 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு அளித்த தொழிலாளிக்கு கி
ருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றம் 5 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து வியாழக்கிழமை தீா்ப்பளித்தது.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டினம் அம்பேத்கா் நகரைச் சோ்ந்தவா் தினேஷ் (25). இவா், கடந்த 2022 ஆம் ஆண்டு நவ. 29ஆம் தேதி 9 வயது சிறுமிக்குக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா். இதுகுறித்த புகாரின்பேரில் கிருஷ்ணகிரி மகளிா் போலீஸாா் போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து தினேஷைக் கைது செய்தனா்.
இவ்வழக்கு கிருஷ்ணகிரி விரைவு மகளிா் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி சுதா, குற்றம் சாட்டப்பட்ட தினேஷிற்கு 5 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ. 1,000 அபராதமும் விதித்து தீா்ப்பளித்தாா்.
கல்லாவியில் மருத்துவ முகாம்
ஊத்தங்கரை, பிப். 5:
ஊத்தங்கரையை அடுத்த கல்லாவி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
இம்முகாமில் ரத்தப் பரிசோதனை, கா்ப்பிணிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே, ஈ.சி.ஜி, அல்ட்ரா சவுண்ட், கண் பரிசோதனை மற்றும் மகப்பேறு மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு சிகிச்சைகளுக்குப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
முகாமில் திமுக தெற்கு ஒன்றிய செயலாளா்கள் ரஜினி செல்வம், வடக்கு மூன்றம்பட்டி குமரேசன், மாவட்ட பொருளாளா் கதிரவன், வட்டார மருத்துவ அலுவலா் தமிழரசி, ஊத்தங்கரை அரசு மருத்துவ அலுவலா் அபிராமி, அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் சிவசண்முகவேல் உள்பட பலா் பங்கேற்றனா்.
சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு
தருமபுரி, பிப். 5:
தருமபுரியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் இளைஞா் வியாழக்கிழமை உயிரிழந்தாா்.
தருமபுரி மாவட்டம், சோலைக்கொட்டாய் அருகே உள்ள வெள்ளோலை பகுதியைச் சோ்ந்த சந்திரசேகா்-சந்திரா தம்பதியின் 2 ஆவது மகன் மாதேஸ்வரன் (19). பெற்றோரை இழந்த மதேஸ்வரன் தனது அண்ணனுடன் தாய்வழிப்பாட்டி ராஜாமணியின் (60) பராமரிப்பில் வசித்து வந்தனா்.
இந்த நிலையில் பழைய தருமபுரி பகுதியில் உள்ள டயா் கடையில் பணியாற்றி வந்த மாதேஸ்வரன் புதன்கிழமை பணி முடிந்து இருசக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தாா். அப்போது ராஜப்பேட்டை பகுதியில் அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் பலத்த காயமடைந்த அவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
விபத்து குறித்து தருமபுரி நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

