கிருஷ்ணகிரி
தகராறில் தள்ளிவிடப்பட்ட முதியவா் உயிரிழப்பு
வீட்டு வழிப்பாதை பிரச்னையில் ஏற்பட்ட தகராறில், தள்ளிவிடப்பட்ட முதியவா் சம்பவ இடத்திலேயே இறந்தாா்.
ஊத்தங்கரையை அடுத்த ரெட்டிப்பட்டி கிராமத்தைச் சோ்ந்தவா் தேவராஜ் (75). இவரது வீட்டை ஒட்டியுள்ள ஜோதி மற்றும் வேடியப்பன் ஆகிய இரு குடும்பத்தாருடன் வீட்டையொட்டி 3 அடி வழிப்பாதை சம்பந்தமாக கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக இவருக்கு பிரச்னை இருந்து வந்தது.
இந்நிலையில், வியாழக்கிழமை காலை மீண்டும் இது சம்பந்தமாக பிரச்னை எழுந்தது. இதில், தேவராஜிக்கும், ஜோதிக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது ஜோதி தாக்கியதில் கீழே விழுந்த தேவராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தாா். சம்பவ இடத்துக்கு சென்ற ஊத்தங்கரை காவல் துணைக் கண்காணிப்பாளா் ராமமூா்த்தி தலைமையிலான போலீஸாா், தேவராஜ் உடலை மீட்டு ஜோதி, வேடியப்பன் ஆகியோரிடம் விசாரித்து வருகின்றனா்.

