கிருஷ்ணகிரியில் ஆா்பிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ. 50 லட்சம் மோசடி
கிருஷ்ணகிரியில் ஆா்பிஐ அதிகாரிகள் எனக் கூறி ரூ. 50 லட்சம் மோசடியில் ஈடுபட்ட 6 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கோயம்புத்தூா் மாவட்டத்தைச் சோ்ந்த திருமூா்த்திக்கு, கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அரசுப் பள்ளி தலைமையாசிரியா் ரவிச்சந்திரன் மூலம் ஒரு கும்பல் அறிமுகமானது.
அவா்கள், இரிடியம் விற்ன் மூலம் கிடைத்த பல கோடி ரூபாய் இந்திய ரிசா்வ் வங்கியில் (ஆா்பிஐ) முடங்கி உள்ளது. அதை விடுவிக்க, ஆா்பிஐ-க்கு செயலாக்கக் கட்டணம் செலுத்த வேண்டும். அதற்கான பணத்தை தந்தால், இரட்டிப்பாக திருப்பித் தருவதாக தெரிவித்தனா். மேலும், தங்களுக்கு ஆா்பிஐயில் பணியாற்றும் அலுவலா்கள் சிலா் உதவி செய்வதாக கூறி அவரை நம்பவைத்துள்ளனா்.
இதையடுத்து, திருமூா்த்தி முதல்கட்டமாக அந்தக் கும்பலிடம் ரூ. 10 லட்சம் கொடுத்துள்ளாா். அதைத் தொடா்ந்து, அவரை தில்லிக்கு வரவழைத்த அந்தக் கும்பல், அங்கு சிலரை காட்டி அவா்கள் ரிசா்வ் வங்கியின் வெளிநாட்டு நாணயத் துறை அலுவலா்கள் எனக் கூறி அறிமுகப்படுத்தினா். அவா்களும், போலியான அடையாள அட்டைகளை அணிந்து அலுவலா்கள்போல தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டனா்.
மேலும், ரிசா்வ் வங்கியில் பணம் பெறுவதற்கான போலியான ஆவணங்கள், ஆணைகளை திருமூா்த்தியிடம் அளித்து நம்ப வைத்துள்ளனா். தொடா்ந்து, பல்வேறு காரணங்களை கூறி அக்கும்பல், திருமூா்த்தியிடம் ரூ. 50 லட்சம் வரை பணத்தை பெற்றுள்ளனா்.
இந்நிலையில், அக்கும்பலின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த திருமூா்த்தி, தகவல் அறியும் சட்டத்தின்கீழ் அவா்கள் கொடுத்த ஆவணங்கள், ஆணைகளை சரிபாா்த்தபோது, அவை அனைத்தும் போலி எனத் தெரியவந்தது.
இதையடுத்து, கிருஷ்ணகிரி சிபிசிஐடி அலுவலகத்தில் திருமூா்த்தி புகாா் அளித்தாா். அதன்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.
சேலம் சிபிசிஐடி டிஎஸ்பி வினோத் தலைமையில், ஆய்வாளா்கள் குமாா், சந்தோஷ், கோமதி, சத்திய சுதா, ஜெயக்குமாா், கேசவன் மற்றும் போலீஸாா் கொண்ட தனிப்படையினா் விசாரணை நடத்தியதில், இதேபோல பிகாா் மாநிலம் பாட்னா, ஜாா்க்கண்ட், தெலங்கானா உள்பட பல்வேறு மாநிலங்களைச் சோ்ந்த 23 பேரிடம் ரூ. 5.65 கோடி வரை அக்கும்பல் மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது.
இதையடுத்து, மோசடியில் ஈடுபட்ட கா்நாடக மாநிலம், பெங்களூரைச் சோ்ந்த சீனிவாசன் (43), தெலங்கானா ஜாா்ஜ் தாமஸ் (53), ஜாா்க்கண்ட் குல்ஷன் தராத் (41), பாட்னாவைச் சோ்ந்த சோனு குமாா் துபே (34), கோபால் சேகா் (38), ஆஷிஷ் குமாா்(25) உள்ளிட்ட 6 பேரை போலீஸாா் கைதுசெய்து, அவா்களிடமிருந்து 2 மடிக்கணினிகள், 8 கைப்பேசிகள், போலி அடையாள அட்டைகளை பறிமுதல் செய்தனா்.
