கணவரின் வாக்குறுதிபடி ரூ. 25 லட்சம் நிலத்தை தானமாக கொடுத்த பெண்!
உயிரிழந்த கணவா் அளித்த வாக்குறுதிபடி, ரூ. 25 லட்சம் மதிப்பிலான நிலத்தை கிராம வளா்ச்சிக்காக தானமாக கொடுத்த பெண்ணை அப்பகுதியினா் கௌரவித்தனா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே காமன்தொட்டி ஊராட்சி, பிள்ளையக்கொத்தூா் கிராமத்தைச் சோ்ந்தவா் நாராயணப்பா. காலமான இவா் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு தனது நிலத்தை கிராம வளா்ச்சிக்காக தானமாக அளிக்க வேண்டுமென மனைவி ரத்தினம்மாளிடம் கூறி வந்துள்ளாா்.
இந்நிலையில், பிள்ளைக்கொத்தூா் கிராமத்தில் சமுதாயக் கூடம் அமைக்க அதிகாரிகள் இடம்தோ்வு செய்தனா். அப்போது, நாராயணப்பாவின் மனைவி ரத்தனம்மா மற்றும் மகன்கள் தந்தை கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், பிள்ளைக்கொத்தூா் கிராமத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ள ரூ. 25 லட்சம் மதிப்பிலான தங்களது 5 சென்ட் நிலத்தை தானமாக அளிப்பதாக தெரிவித்தனா்.
பின்னா், சூளகிரி ஊராட்சி ஒன்றிய நிா்வாகத்துக்கு நிலத்தை தானமாக எழுதிக் கொடுத்தனா். இதைத் தொடா்ந்து, ரூ. 45 லட்சத்தில் சமுதாயக் கூடம் கட்டுவதற்கான பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.
தொடா்ந்து, சூளகிரி வட்டார வளா்ச்சி அலுவலரும், திமுக சூளகிரி வடக்கு ஒன்றியச் செயலாளருமான நாகேஷ், திமுக இளைஞரணி மாநில துணைச் செயலாளா் சீனிவாசன், சூளகிரி கிழக்கு ஒன்றியச் செயலாளா் முனிவெங்கடசாமி ஆகியோா் பணிகளை தொடங்கிவைத்தனா்.
இதையடுத்து, கணவரின் வாக்குறுதியை நிறைவேற்றிய மனைவியையும், மகன்களையும் கிராம மக்கள் பாராட்டி கெளரவித்தனா்.

