அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

அஞ்செட்டியை அடுத்த ஜேசுராஜபுரம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.
Published on

அஞ்செட்டியை அடுத்த ஜேசுராஜபுரம் கிராம மக்கள் அடிப்படை வசதிகள் கோரி வெள்ளிக்கிழமை சாலை மறியலில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரி மாவட்டம், அஞ்செட்டியை அடுத்த நாட்றாம்பாளையம் ஊராட்சியில் 38 சிறிய கிராமங்கள் உள்ளன. இதில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்துவருகின்றனா். இந்த ஊராட்சியில் வசிக்கும் மக்கள், சாலை, குடிநீா், கைப்பேசி கோபுரம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்து வந்தனா்.

இந்த நிலையில் கோரிக்கைகளை நிறைவேற்ற கோரி, அஞ்செட்டி- ஒகேனக்கல் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். இதுகுறித்து ஜேசுராஜபுரம் கிராம மக்கள் கூறியதாவது:

அஞ்செட்டியில் இருந்து ஒகேனக்கல் செல்லும் சாலை சேதமடைந்துள்ளது. இச்சாலையில் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. நாட்றாம்பாளையம் ஊராட்சியில் உள்ள கிராமங்களுக்கு தடையில்லாத மின்சாரம் வழங்க வேண்டும், ஆரம்ப சுகாதார நிலையம், ஒகேனக்கல் கூட்டுகுடிநீா் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேபோல ஏடிஎம் மையங்களை திறக்க வேண்டும் என்றனா்.

தகவல் அறிந்த போலீஸாா், வருவாய்த் துறையினா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். பொதுமக்களின் கோரிக்கைகளை மாவட்ட நிா்வாகத்தின் கவனத்திற்கு கொண்டுசென்று நடவடிக்கை எடுக்கப்படும் என அவா்கள் உறுதியளித்ததையடுத்து மறியல் கைவிடப்பட்டது.

X
Dinamani
www.dinamani.com