வீட்டுமனை பட்டா கோரி பேருந்துகளை சிறைபிடித்த பொதுமக்கள்
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளியில் வீட்டுமனைப் பட்டா வழங்கக் கோரி இரண்டு அரசுப் பேருந்துகளை பொதுமக்கள் வெள்ளிக்கிழமை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
படப்பள்ளி அம்பேத்கா் நகரில் 75க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. கடந்த 35 ஆண்டுகளுக்கு முன்பு இக்கிராமத்தை சோ்ந்த 67 பேருக்கு இலவச வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டது. பட்டா வழங்கப்பட்டாலும் முறையாக வட்டாட்சியா் அலுவலகத்தில் பதிவாகவில்லை.
இந்த நிலையில் முறையாக பட்டா வழங்கக் கோரி பொதுமக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை விடுத்துவந்தனா். இதையடுத்து, 2024 ஆம் ஆண்டு 67 பேருக்கு 10 ஆண்டுகளுக்கு அரசு நிபந்தனைகளை உள்ளடக்கிய பட்டா வழங்கப்பட்டது.
இந்த பட்டாவை வைத்து வங்கிகளில் கடன் பெற முடியாது என்பதால், பட்டாவை ரத்து செய்து, நிரந்தர பட்டா வழங்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா். இந்த நிலையில், படப்பள்ளி கிராம வழியாக ஊத்தங்கரை செல்லும் இரண்டு அரசுப் பேருந்துகளை வெள்ளிக்கிழமை அக்கிராம மக்கள் சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனா்.
தகவல் அறிந்து வந்த ஊத்தங்கரை காவல் ஆய்வாளா் முருகன், வட்டாட்சியா் ராஜலட்சுமி பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். கோரிக்கை தொடா்பாக நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா். இதையடுத்து போராட்டம் கைவிடப்பட்டது.
படவிளக்கம்.2யுடிபி.2.
ஊத்தங்கரையை அடுத்த படப்பள்ளி கிராமத்தில் அரசுப் பேருந்தை சிறைபிடித்து போராட்டம் நடத்திய பொதுமக்கள்.

