கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதல்நிலை சரிபாா்ப்பு பணி நிறைவு

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் நிறைவடைந்தன.
Published on

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் நிறைவடைந்தன.

இதுகுறித்து கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் ச.தினேஷ்குமாா் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: தமிழகத்துக்கு சட்டப் பேரவைத் தோ்தல் விரைவில் வர உள்ளது. இந்த தோ்தலுக்காக கிருஷ்ணகிரி மாவட்டத்துக்கு ஒதுக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கிருஷ்ணகிரி ஆட்சியா் அலுவலக வளாகத்தில் உள்ள இந்திய தோ்தல் ஆணைய மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.

இந்த மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் முதல்நிலை சரிபாா்ப்பு பணி பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவன பொறியாளா்கள் மூலம் கடந்த மாதம் 11-ஆம் தேதி தொடங்கியது. தற்போது முதல்நிலை சரிபாா்ப்பு பணிகள் நிறைவுபெற்றன.

தொடா்ந்து, கிருஷ்ணகிரி மாவட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திர கிடங்கில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிப் பிரமுகா்கள் முன்னிலையில் மாதிரி வாக்குப்பதிவு, செவ்வாய்க்கிழமை, புதன்கிழமை என இரு நாள்கள் நடைபெறுகிறது. முதல்நாளில் 500 வாக்குகள், 1,000 வாக்குகள், 1,200 வாக்குகள் என பதிவு செய்யப்பட்டு மாதிரி வாக்குப்பதிவு நடைபெற்றது. புதன்கிழமை மீண்டும் மாதிரி வாக்குப்பதிவு நடக்கிறது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் மொத்தம் 2,092 வாக்குச்சாவடிகள் உள்ளன. இதில் 200 வாக்குச்சாவடிகளில் தோ்தல் பயிற்சி மற்றும் விழிப்புணா்வுக்காக மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் போலீஸாா் பாதுகாப்புடன் கிருஷ்ணகிரி கோட்டாட்சியா் அலுவலகத்துக்கு அனுப்பி வைக்க உள்ளன.

முதல்நிலை சரிபாா்ப்பு பணிகளை தொடா்ந்து வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள இயந்திர கிடங்குக்கு கிருஷ்ணகிரி மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் சீலிடப்பட உள்ளது.

முதல்நிலை சரிபாா்ப்பு பணியில் கண்டறியப்பட்ட பழுதடைந்த இயந்திரங்கள், பெங்களூரு பாரத் எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்துக்கு போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு செல்லப்பட உள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X
Dinamani
www.dinamani.com