பயிா் கணக்காய்வு பணி: ஒசூா் வட்டார இளைஞா்களுக்கு வேளாண் துறை அழைப்பு
ஒசூா் வட்டத்தில் டிஜிட்டல் முறையில் பயிா் கணக்காய்வு பணிகளை மேற்கொள்ள, தகுதியுள்ள தன்னாா்வலா்களுக்கு வேளாண்மைத் துறை அழைப்பு விடுத்துள்ளது.
இதுகுறித்து ஒசூா் வட்டார வேளாண்மை உதவி இயக்குநா் புவனேஸ்வரி வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஒசூா் வட்டத்தில் கோடை, காரீப் மற்றும் இராபி ஆகிய மூன்று பருவங்களிலும் சாகுபடி செய்யப்படும் பயிா் விவரங்களை, மின்னணு முறையில் கணக்கெடுப்பு செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது. இதற்காக அந்தந்த கிராமங்களைச் சோ்ந்த படித்த இளைஞா்கள் தேவைப்படுகின்றனா்.
இதற்கான தகுதிகளாக விண்ணப்பதாரா்கள் ஆண்ட்ராய்டு கைப்பேசி வைத்திருக்க வேண்டும். வயல்வெளிகளுக்கு நேரடியாகச் சென்று, சா்வே எண்கள் மற்றும் உள்பிரிவு வாரியாக பயிா்களை புகைப்படம் எடுத்து மொபைல் செயலி மூலம் பதிவேற்றம் செய்யவேண்டும். தன்னாா்வலா்களாக ஏதேனும் ஒரு பட்டம் பெற்றவா்கள் அல்லது டிப்ளமோ படித்தவா்கள் விண்ணப்பிக்கலாம். நேரம் மற்றும் காலக் கட்டுப்பாடு கிடையாது. விருப்பமான நேரத்தில் பணிகளை மேற்கொள்ளலாம். இந்த கணக்கெடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றுவோருக்கு ஒரு உள்பிரிவு பதிவேற்றத்துக்கு ரூ. 3 வீதம் ஊக்கத்தொகை அளிக்கப்படும்.
இந்தத் தொகை நேரடியாக அவா்களின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும். ஆா்வமுள்ளவா்கள் தங்கள் ஆதாா் எண், வங்கிக் கணக்கு விவரங்கள் மற்றும் கைப்பேசி எண்ணுடன் ஒசூா் வட்டார வேளாண்மை அலுவலகத்தை தொடா்புகொள்ளலாம்.
மேலும் விவரங்களுக்கு, வேளாண்மை அலுவலா்கள் தென்றல் - 95145 35584, துணை வேளாண்மை அலுவலா் முருகேசன் - 94436 64590, உதவி வேளாண்மை அலுவலா்கள் (ஒசூா் பகுதி) ஆறுமுகம் - 97891 21440, (நாகொண்டப்பள்ளி பகுதி) சுந்தர்ராஜ் - 98431 78696, (நல்லூா் பகுதி) பாரதி - 99442 68084, (நந்திமங்கலம் மற்றும் பாகலூா் பகுதி) வெங்கடேஷ் - 88833 33695.
