‘அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும்’
அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என கிருஷ்ணகிரி அரசு மகளிா் கலைக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வில் விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.
கல்லூரி வளாகத்தில் பாலின உளவியல் கண்காணிப்பு மற்றும் விழிப்புணா்வுக் குழுவின் சாா்பில், பாலின சமத்துவம் மற்றும் சமநிலை எனும் தலைப்பில் சிறப்பு சொற்பொழிவு நடைபெற்றது. கல்லூரியின் முதல்வா் செள.கீதா தலைமை வகித்தாா். கல்லூரியின் ஆங்கிலத் துறை உதவிப் பேராசிரியா் கல்பனா வரவேற்றாா். சிறப்பு விருந்தினா்களாக மாவட்ட சமூக நல அலுவலரும், பாலின வல்லுனருமான தேவபிரசன்னா, மாவட்ட நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளா் ராகவி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
இதில், பாலின சமத்துவத்துக்கும், சமநிலைக்குமான வேறுபாடு, வாழ்வில் முன்னேற்றத்துக்கான வாய்ப்புகள், அதை எவ்வாறு பயன்படுத்திக் கொள்வது, பல்வேறு தொழில் மற்றும் பணியில் பாலின வேறுபாடு குறித்தும், பல்வேறு துறைகளில் சாதிக்கும் பெண்கள் குறித்தும், அனைத்து துறைகளிலும் பெண்களால் சாதிக்க முடியும் என மாணவிகளுக்கு தன்னம்பிக்கை ஊட்டப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், அனைத்து துறைத்தலைவா்கள், ஆசிரியா்கள், அலுவலகப் பணியாளா்கள், மாணவியா் பங்கேற்றனா்.
