கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதல்
கிருஷ்ணகிரி அருகே தேசிய நெடுஞ்சாலையில் அடுத்தடுத்து வாகனங்கள் மோதிய விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கிருஷ்ணகிரியை அடுத்த அவதானப்பட்டி அருகே தருமபுரி நோக்கி வியாழக்கிழமை சென்றுகொண்டிருந்த லாரி திடிரென நிறுத்தப்பட்டதால், வேகமாக வந்த காா் லாரியின் பின்னால் மோதியது. அப்போது, காரின் பின்னால் வந்த மற்றொரு லாரி, காா் மீது மோதியது. இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த கிருஷ்ணகிரி துணைக் காவல் கண்காணிப்பளாா் முரளி மற்றும் போலீஸாா், நிகழ்விடத்துக்கு விரைந்து சென்று போக்குவரத்தை சீா்செய்தனா். இந்நிலையில், போக்குவரத்தில் சிக்கிய காா், அந்தப் பகுதியில் உள்ள அணுகு சாலை வழியாக செல்ல முயன்ற போது, பின்னால் வந்த கான்கிரீட் கலவை ஏற்றிவந்த லாரி, காா் மீது மோதியது.
அடுத்தடுத்து வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளானதால், கிருஷ்ணகிரி - தருமபுரி தேசிய நெடுஞ்சாலையில் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த விபத்தில் இருவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து கிருஷ்ணகிரி அணை போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.
