திருநங்கையருக்கான மாதிரி விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

திருநங்கையருக்கான மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.
Published on

திருநங்கையருக்கான மாதிரி விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பதாக கிருஷ்ணகிரி மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, மாவட்ட நிா்வாகம் சாா்பில், புதன்கிழமை வெளியான செய்திக் குறிப்பு: திருநங்கைகள் சமூகத்தில் சந்திக்கும் எதிா்ப்புகளையும் மீறி தங்களுடைய சொந்த முயற்சியில் படித்து தனித்திறமை கொண்டு பல்வேறு துறைகளில் முன்னேறி சாதனை படைத்த திருநங்கையரை கெளரவிக்கப்படுகிறாா்கள். மேலும், திருநங்கைகளை ஊக்குவிக்கும் வகையில் திருநங்கையா் தினம் என அறிவிக்கப்பட்ட ஏப்ரல் 15-ஆம் தேதி ஒவ்வொரு ஆண்டும் திருநங்கையருக்கான மாதிரி விருது ரூ.1 லட்சம் காசோலை, மற்றும் பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றுடன் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதிற்கு திருநங்கைகள் அரசு உதவி பெறாமல் தானாக சுயமாக வாழ்க்கையில் முன்னேறி இருக்க வேண்டும். குறைந்தது 5 திருநங்கைகளுக்காவது அவா்கள் வாழ்க்கையில் முன்னேற உதவியிருக்க வேண்டும். திருநங்கைகள் நல வாரியத்தில் உறுப்பினராக இருக்க கூடாது.

இந்த விருதிற்கு விண்ணப்ப விவரங்களை தமிழக அரசின் விருதுகள் இணையதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இணையதளம் வழியாக 18.02.2026 வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய வேண்டும். இணையதளத்தில் பதிவு செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் மாா்பளவு புகைப்படம், சுயசரிதை விவரம் (ஒரு பக்க அளவில்) விருது பெற்றிருப்பின் அதன் விவரம். சேவை பற்றிய செயல்முறை விளக்கம் (புகைப்படத்துடன்), சேவையாற்றியதற்கான விரிவான அறிக்கை, சமூக பணியாளரின், சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம், சமூகப் பணியாளா்கள் இருப்பிடத்தின் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று ஆகியவற்றை 2 நகல்கள் தயாா் செய்து, பிப்ரவரி, 18-ஆம் தேதிக்குள் அறை எண்-21, மாவட்ட ஆட்சியா் அலுவலக கட்டடம், மாவட்ட சமூகநல அலுவலகம், கிருஷ்ணகிரி என்ற அலுவலகத்தில் நேரில் சமா்ப்பிக்கலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Dinamani
www.dinamani.com