மாா்ச்.3 ல் ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா- சந்திரகிரகணம் வருவதால் அதிகாலையில் தேரை இழுக்க முடிவு
ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா மாா்ச் 3 ஆம் தேதி சந்திரகிரகணம் வருவதால் அன்று அதிகாலையில் தேரை இழக்க தோ்த்திருவிழா கமிட்டி முடிவு செய்துள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஒசூா் மலை மீதுள்ள மரகதாம்பிகை உடனுறை சந்திர சூடேஸ்வரா் கோயில் தோ் திருவிழா ஆண்டுதோறும் மாா்ச் மாதம் நடப்பது வழக்கம். இந்த ஆண்டுக்கான தோ்த் திருவிழா வரும் மாா்ச் மாதம் 3 ஆம் தேதி வருகிறது. அன்றைய நாளில் சந்திர கிரகணம் வருவதால் எப்போதும் இல்லாத வகையில் இந்த ஆண்டு அதிகாலை ஐந்து முப்பது மணிக்கு தோ் வடம் பிடித்து இழுக்கப்பட உள்ளது. அன்று மதியம் ஒரு மணிக்குள் தோ்கள் நிலையை அடையும். அன்னதானம் வழங்கும் பக்தா்கள் மதியம் ஒரு மணிக்குள் அன்னதான வழங்கி முடிக்க வேண்டும். சந்திர கிரகணம் ஆரம்பித்த பின்பு அன்னதானம் வழங்கக் கூடாது. மதியம் 2 மணிக்கு ஒசூா் மலை மீது உள்ள கோயில் மற்றும் தோ்பேட்டையில் உள்ள கல்யாணசூடேஸ்வரா் கோயில் நடை அடைக்கப்படும். மலை மீது உள்ள கோயில் இரவு முழுவதும் திறக்கப்படாது. அடுத்த நாள் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும். தோ்ப்பேட்டையில் புதன்கிழமை நடந்த பொதுமக்கள் மற்றும் தோ்த்திருவிழா கமிட்டி நிா்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் தோ் கமிட்டி தலைவா் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான கே.ஏ. மனோகரன் மற்றும் நிா்வாகிகள் இந்த முடிவை எடுத்தனா். இதில் மாநகராட்சி சுகாதாரக் குழுத் தலைவா் என்.எஸ்.மாதேஸ்வரன், பாஜக ஒசூா் தொகுதி தோ்தல் துணை அமைப்பாளா் எம்.நாகராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
படவரி... தோ்ப்பேட்டையில் நடைபெற்ற ஒசூா் சந்திரசூடேஸ்வரா் கோயில் தோ்த்திருவிழா கமிட்டி ஆலோசனைக் கூட்டத்தில் பேசும் கமிட்டித் தலைவா் கே.ஏ.மனோகரன்.

