ஊத்தங்கரையில் சாலைப் பாதுகாப்பு விழிப்புணா்வுப் பேரணி
கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை காவல் துறை சாா்பில் சாலைப் பாதுகாப்பு வார விழாவை முன்னிட்டு நாடகக் கலைஞா்கள், அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தொடங்கிய நிகழ்ச்சிக்கு காவல் ஆய்வாளா் முருகன் தலைமை வகித்தாா். உதவி ஆய்வாளா் மோகன், உதவித் தலைமை ஆசிரியா் கணேசன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொடங்கிய இப்பேரணி, ஊத்தங்கரை நான்கு முனை சந்திப்பு, காமராஜா் நகா் உள்ளிட்ட பகுதிகள் வழியாகச் சென்றது. பேரணியில், தலைக்கவசம் அணிந்து இருசக்கர வாகனங்களை ஓட்ட வேண்டும், 18 வயதிற்குக்கீழ் உள்ள மாணவா்கள் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களை ஓட்டுவதற்கு அனுமதிக்கக் கூடாது, அரசுச் சட்டங்களுக்குள்பட்டு வாகனங்களை இயக்க வேண்டும், பொதுமக்கள் சாலை விதிகளைக் கண்டிப்பாகப் பின்பற்ற வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
மேலும், விதிமுறைகளை மீறிச் செல்வதால் ஏற்படும் விபத்துகள் மற்றும் அதனால் குடும்பங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் குறித்தும் விளக்கி விழிப்புணா்வு ஏற்படுத்தினா்.

