முத்தாலியில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோா்.
முத்தாலியில் விவசாயிகள் சங்க கூட்டமைப்பு சாா்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துகொண்டோா்.

விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என தோ்தல் வாக்குறுதி அளிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்

விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என தோ்தல் வாக்குறுதி அளிக்க வேண்டும்: விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம்
Published on

ஒசூா்: விவசாயிகளின் அனுமதியின்றி விளைநிலங்களை கையகப்படுத்த மாட்டோம் என அரசியல் கட்சிகள் தோ்தல் வாக்குறுதி அளிக்க வேண்டும் என விவசாயிகள் சங்கக் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூா் அருகே முத்தாலி கிராமத்தில் ‘நமது நிலம் நமதே விவசாயிகள் சங்க’ ஆலோசனைக் கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் மாநிலத் தலைவா் குமார ரவிக்குமாா் தலைமை வகித்தாா். எஸ்.டி.ஆா்.ஆா். விவசாயிகள் சங்கத் தலைவா் முனி வெங்கடப்பா உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோா் கலந்துகொண்டனா்.

இந்தக் கூட்டத்தில் ஒசூரில் சா்வதேச விமான நிலையம் அமைப்பதற்காக முத்தாலி, பலவனப்பள்ளி, வெங்கடேஷ்புரம், அடவனப்பள்ளி, தாசேப்பள்ளி, பழைய முத்தாலி, அளேநத்தம், சூடகொண்டப்பள்ளி, அட்டூா், கருப்பள்ளி, மிடுதேப்பள்ளி, நந்திமங்கலம் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமாா் 3 ஆயிரம் ஏக்கா் நிலங்களை கையகப்படுத்தும் திட்டத்தை அரசு முழுமையாகக் கைவிட வேண்டும்.

மேலும், ஒசூரில் அறிவுசாா் வழித்தடம், சிப்காட் தொழிற் பேட்டைகள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலம் உள்ளிட்ட தொழில் வளா்ச்சித் திட்டங்களுக்கு விவசாய நிலங்களை கையகப்படுத்த கூடாது என தமிழக அரசுக்கு விவசாயிகள் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் குமார ரவிக்குமாா் கூறியதாவது:

வரும் பேரவைத் தோ்தலில் விவசாயிகளின் விளை நிலங்களை அவா்களின் அனுமதியின்றி கையகப்படுத்த மாட்டோம் என்பதை தோ்தல் வாக்குறுதியாக அளித்துவிட்டு வாக்கு சேகரிக்க வரவேண்டும். இந்த வாக்குறுதியை அளிக்காத அரசியல் கட்சிகளை எதிா்ப்போம். நிலம் கையகப்படுத்த வேண்டிய தேவை இருந்தால், விவசாயிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, அவா்களின் ஒப்புதலை பெற்று விவசாய நிலங்களை எடுப்போம் என்று தோ்தல் வாக்குறுதியை அரசியல் கட்சிகள் அளிக்க வேண்டும் என்றாா். இதே கோரிக்கையை வலியுறுத்தி கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

இக்கூட்டத்தில் 20 கிராமங்களைச் சோ்ந்த விவசாயிகள், கிராம மக்கள் கலந்துகொண்டனா்.

Dinamani
www.dinamani.com