கட்டுப்பாடுகளால் முடங்கிப்போன நீரா பானம் திட்டம் பதிவு செய்ய  ஆர்வம் காட்டாத விவசாயிகள்

"நீரா' பானம் இறக்க அனுமதி கேட்டு பல மாவட்டங்களில் ஒரு குழு கூட இன்னும் பதிவு செய்யவில்லை.

"நீரா' பானம் இறக்க அனுமதி கேட்டு பல மாவட்டங்களில் ஒரு குழு கூட இன்னும் பதிவு செய்யவில்லை. இதனை இறக்க விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளால் விவசாயிகள் இதில் ஆர்வம் காட்டவில்லை எனக் கூறப்படுகிறது. 
தமிழகத்தில் சுமார் 4 லட்சம் ஹெக்டேரில் 12 கோடி தென்னை மரங்கள் உள்ளன.  இவற்றிலிருந்து கள் இறக்கத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில்,  ஆல்கஹால் இல்லாத "நீரா' பானத்தை இறக்க அனுமதிக்க வேண்டுமென விவசாயிகள் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதையடுத்து,  தென்னை மரத்திலிருந்து "நீரா' பானம் இறக்க, தமிழக அரசு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அனுமதி அளித்துள்ளது.  இதுதொடர்பாக கடந்த ஜூன் மாதம் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுடன்,  அரசு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. 
இதன்படி,  தனி நபர்கள் "நீரா' பானம் இறக்க முடியாது.  தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களுடன் தென்னை விவசாயிகள் இணைந்து "நீரா' பானத்தை இறக்கி சந்தைப்படுத்தலாம். " நீரா' பானம் இறக்கவும்,  சந்தைப்படுத்தவும் உரிமம் பெற வேண்டும். 
இதற்கு உரிய படிவங்களைக் கொண்டு கலால் உதவி ஆணையர் மூலம் மாவட்ட ஆட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.   ஒவ்வொரு தென்னை உற்பத்தியாளர் நிறுவனத்துக்கும் 40,000 மரங்கள் வரை நீரா பானம் இறக்க அனுமதிக்கப்படும்.  கலால் உதவி ஆணையர்,   வட்டாட்சியர் ஆகியோர் இணைந்து அந்த மரங்களைக் குறியீடு செய்வர்.  மேலும்,  உற்பத்தி சந்தைப்படுத்துதலுக்குத் தேவையான சலுகைகள் மற்றும் உதவிகளை மாவட்ட நிர்வாகம் செய்து கொடுக்கும். 
பலன் இல்லாத திட்டம்: "நீரா' இறக்க,   விற்பனை செய்ய அரசாணையில் தெரிவிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் காரணமாக,  அரசாணை வெளியிடப்பட்டு, 10 மாதங்களாகியும் இதுவரை அனுமதி கேட்டு 10 குழுக்களுக்கும் குறைவாகவே பதிவு செய்துள்ளன என்கிறார் தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலர் செ.நல்லசாமி. 
இதுகுறித்து அவர் மேலும் தெரிவித்தது:  அரசு வெளியிட்ட புள்ளிவிவரத்தின்படி,  தமிழகத்தில் 552 தென்னை உற்பத்தியாளர் சங்கங்களும்,  66 தென்னை உற்பத்தியாளர் கூட்டமைப்புகளும் உள்ளன.  கோவை,  புதுக்கோட்டை,  கன்னியாகுமரி மாவட்டங்களில் 10-க்கும் குறைவான எண்ணிக்கையிலேயே குழுக்கள் பதிவு செய்துள்ளன.  இங்கு இறக்கப்படும் "நீரா' பானத்தை அப் பகுதியிலேயே விற்பனை செய்ய முடியவில்லை. " நீரா' பானம் இறக்குவதிலும்,  அதனைச் சந்தைப்படுத்துவதிலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும்.
அனைவருக்கும் அனுமதி தேவை: விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் அனுமதி அளிக்க வேண்டும்.  "நீரா' பானத்துக்கான தர நிர்ணயத்தை மீறும் விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்யலாம். " நீரா' இறக்குவதை,  விற்பனை செய்யப்படுவதைக் கண்காணிக்க வட்டார அளவில் கண்காணிப்பு அலுவலர்களை நியமிக்கலாம்.  அப்போதுதான் "நீரா' பானம் இறக்கும் திட்டம் மூலம் விவசாயிகள் பலன் பெற முடியும்.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் போன்று,  "நீரா' பானம் விற்பனை செய்ய தனியாகக் கடைகளைத் திறக்க வேண்டும்.  டாஸ்மாக் கடைகள் இருக்கும் வரை இதற்கு வாய்ப்பில்லை. டாஸ்மாக் விற்பனை குறைந்துவிடும் என்பதால்தான் "நீரா' பானம் இறக்கும் திட்டம் முடக்கப்பட்டுள்ளது என்றார்.
 

"நீரா' இறக்குவதும்,  விற்பனையும்
தென்னை மரத்தில் பாளையைச் சீவி, அதிலிருந்து வடியும் திரவத்தை சுண்ணாம்பு தடவிய கலயத்தில் சேகரித்தால் அது, பதநீர்.  அதையே சுண்ணாம்பு தடவாத கலயத்தில் சேகரித்தால்,  அது புளித்து, கள்ளாக  மாறும்.  இதே திரவத்தைப் புளிக்க விடாமல் இறக்குவதுதான் நீரா.
5 டிகிரி செல்சியஸ் குளுமையில்தான் "நீரா' எப்போதும் இருக்க வேண்டும்.  அதாவது, சீவப்பட்ஹட தென்னம்பாளைகளில் அதற்கென்று வடிவமைக்கப்பட்ட பானை வடிவ ஐஸ் பெட்டிகளை பொருத்திக் கட்டி வைக்க வேண்டும்.
ஐஸ் பானைகளில் சேகரமாகும் நீரா பானத்தை இறக்கி,  தயாராக உள்ள ப்ரீஸர் பொருத்தப்பட்ட வேனில் ஏற்றி,  கூலிங் சென்டர் எனப்படும் குளுகுளு சேகரிப்பு மையங்களுக்குக் கொண்டு சென்று அங்குள்ள டேங்கரில் நிரப்ப வேண்டும்.
பிறகு அதைப் புட்டியில் நிரப்பி ப்ரீஸர் பொருத்தப்பட்ட மினி வேனில் ஏற்றிச் சென்று, அந்தப் புட்டிகளைக் கடைகளில் விற்பனைக்கு விநியோகம் செய்யலாம்.  கண்டிப்பாக ஐஸ் பெட்டி உள்ள கடைகளில்தான் இதை இருப்பு வைத்து விற்க முடியும்.  3 மாதங்கள் வரை இருப்பு வைத்து விற்பனை செய்யலாம்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com