8 ஆண்டுகளில் 440 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன: அமைச்சர் சி.வி.சண்முகம் தகவல்

வழக்குகளை விரைந்து முடிக்கும் பொருட்டு, தமிழகத்தில் எட்டு ஆண்டுகளில் மட்டும் 440 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளதாக, நாமக்கல்லில்

வழக்குகளை விரைந்து முடிக்கும் பொருட்டு, தமிழகத்தில் எட்டு ஆண்டுகளில் மட்டும் 440 புதிய நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளதாக, நாமக்கல்லில் நடைபெற்ற விழாவில் சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்தார்.
தமிழகத்தின் 13-ஆவது புதிய அரசு சட்டக் கல்லூரி,  நாமக்கல்லில் சனிக்கிழமை காலை திறக்கப்பட்டது.  இந்த விழாவில் பங்கேற்ற, சட்டம் மற்றும் சிறைச்சாலைகள், கனிம வளத் துறை அமைச்சர் சி.வி,சண்முகம் தலைமை வகித்து பேசியது;  சில மாவட்டங்களில் நீதிமன்றம் ஒரு புறமும், சட்டக் கல்லூரி ஒரு புறமாக இருக்கும். சட்டக்கல்லூரி தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டபோது,  முதலில் குமாரபாளையம் தொகுதி தான் தேர்வு செய்யப்பட்டது.  ஆனால், மாவட்டத்தின் தலைநகரில் அமைந்தால்தான் நன்றாக இருக்கும் என அமைச்சர் தங்கமணி முடிவு செய்து,  அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். நாமக்கல்லுக்கு சட்டக்கல்லூரி வந்த பெருமை அவரையே சாரும்.
    அரசுக் கட்டடங்கள் அனைத்தும் சொந்தக் கட்டடங்களாக இருக்க வேண்டும் என்பதே மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் விருப்பம்.  நீதித் துறை சிறப்பாகச் செயல்பட வேண்டும் என்பதற்காக,  நீதிமன்றத்தில் உள்கட்டமைப்பு வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்பதில் அவர் முனைப்புடன் இருந்தார். நீதிபதிகளுக்கும், வழக்குரைஞர்களுக்கும் தேவையான வசதிகளைச் செய்து கொடுத்தால்தான் அவர்களால் சுதந்திரமாகப் பணியாற்ற முடியும் என்பார்.  அது மட்டுமின்றி, ஏழை மக்களுக்கு விரைந்து நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காக, எங்கெல்லாம் வழக்குகள் தேங்கியுள்ளனவோ,  எங்கெல்லாம் வழக்குகள் அதிகம் பதிவாகின்றனவோ, அங்கெல்லாம் புதிய நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.  மகளிர், குடும்ப நலம், பாலியல், வன்கொடுமை குற்றங்கள் தொடர்பாக ஆங்காங்கே தனித்தனி நீதிமன்றங்கள் உருவாக்கப்பட்டன.
2011-2016-ஆம் ஆண்டு வரை, 5 ஆண்டுகளில் அவர் இருந்தபோது 223 நீதிமன்றங்கள் ஏற்படுத்தப்பட்டன.  தற்போதைய முதல்வரும் 3 ஆண்டுகளில் மட்டும் 217 நீதிமன்றங்களை அமைக்க அனுமதி வழங்கியுள்ளார்.  தமிழகம் முழுவதும் எட்டு ஆண்டுகளில் 440 நீதிமன்றங்கள் திறக்கப்பட்டுள்ளன.  தற்போது மொத்தமாக 1146 நீதிமன்றங்கள் உள்ளன. நீதிமன்றம் திறந்தால் மட்டும் போதாது என அதற்கு தேவையான உள்ளகட்டமைப்பு வசதிகள்,  பணியாளர்கள் நியமனம் உள்ளிட்டவையும் உடனுக்குடன் ஏற்படுத்தப்பட்டன. சட்டத் துறைக்கு, 5 ஆண்டு கால ஆட்சியில் ரூ.711 கோடி ஒதுக்கப்பட்டது.  தற்போதைய முதல்வர் 3 ஆண்டுகளில் ரூ.1,111 கோடியை ஒதுக்கியுள்ளார்.
திறமையான வழக்குரைஞர்களை உருவாக்கும் பொருட்டு,  இன்றைய காலக்கட்டத்துக்கு ஏற்றாற்போல்,  அரசு சட்டக் கல்லூரிகளில் தேவையான வசதிகள் செய்து கொடுக்கப்படுகின்றன. பெங்களூரு நேஷனல் சட்டக்கல்லூரி போன்று,  ஸ்ரீரங்கம் தொகுதியில் நேஷனல் சட்டக்கல்லூரி திறக்கப்பட்டு, செயல்பாட்டில் உள்ளது.  தமிழகத்தின் அரசு சட்டக் கல்லூரிகள் 7 எண்ணிக்கையில் இருந்தன.  2008-இல் கடைசியாக வேலூர் மாவட்டத்தில் தொடங்கப்பட்டது.  ஆண்டுதோறும் மாணவர் சேர்க்கை விண்ணப்பங்கள் குவிந்த வண்ணம் இருந்தன.  மொத்தம் 10,526 இடங்கள் உள்ளன.  ஆனால், ஒவ்வோர் ஆண்டும் அதை விட 5 மடங்கு பேர் விண்ணப்பிக்கின்றனர்.  அதற்கான அரசு சட்டக்கல்லூரிகள் இல்லை.  சேலம், திண்டிவனம் உள்ளிட்ட இடங்களில் தனியார் சட்டக் கல்லூரிகள் உள்ளன. ஆனால் தனியார் சட்டக் கல்லூரி செயல்படுவதில், மறைந்த முதல்வருக்கு விருப்பமில்லை. 
அதனாலும், மாணவர்களின் ஆர்வத்தைப் பார்த்தும், 2017-இல் தருமபுரி, விழுப்புரம், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் சட்டக் கல்லூரிகள் திறக்கப்பட்டன. புதிய கட்டடம் கட்டுவதற்காக, ஒவ்வொரு கல்லூரிக்கும் ரூ.70 கோடி வீதம் மொத்தம் ரூ.210 கோடி ஒதுக்கப்பட்டது.  விழுப்புரத்தில் பிரமாண்டமாக சட்டக் கல்லூரி கட்டடம் உருவாகி வருகிறது.  நாமக்கல்லில் அதை விட பிரமாண்ட கட்டடம் ரூ.80 கோடியில் உருவாக்கவுள்ளது.  நிகழாண்டில், எந்தக் கல்லுரியும் திறக்கப்படவில்லை.  கலைக் கல்லுரி, மருத்துவக் கல்லுரி எதற்கும் அனுமதி கொடுக்கப்படவில்லை.  தற்போது மூன்று சட்டக் கல்லூரிகளுக்கு மட்டும்தான் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.  நாமக்கல்லில் நிகழாண்டிலேயய புதிய கட்டடம் கட்டப்படும்.  அனைத்து வசதிகள்,  குளிர்சாதனத்துடன் கூடிய கட்டடமாக இருக்கும். 
தனியார் சட்டக் கல்லூரிகளில் ரூ.4 லட்சம் கட்டணம் வசூலிக்கின்றனர்.  ஆனால்,  அரசு சட்டக் கல்லூரிகளில், முதலில் ரூ. 2,310 செலுத்தினால் போதும்.  அதன்பின், ஆண்டுக்கு ரூ.500 மட்டும் தான் கட்டணம்.  5 ஆண்டுகளுக்கும் ரூ.6,310 மட்டுமே.  புதியதாக ஆரம்பிக்கப்பட்ட காரைக்குடி தனியார் சட்டக் கல்லூரியில் ரூ.4 லட்சம், திண்டிவனம் சட்டக் கல்லூரியில் ரூ.66 ஆயிரம் கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.  வெளிநாடுகளுக்குச் சென்று பயிற்சி மேற்கொள்ள, சட்டக் கல்லூரி மாணவ, மாணவியருக்கு, ஒவ்வோர் ஆண்டும் வழங்கப்பட்ட செலவினத் தொகை ரூ.70 ஆயிரத்தில் இருந்து ரூ.ஒரு லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.  மாணவர்கள் சட்டம் பயின்று  அனைவருக்கும் பயனுள்ளவராக இருக்க வேண்டும் என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com