மக்களவைத் தேர்தல்: அரசு அலுவலர்கள், போலீஸார் 11 ஆயிரம் பேர் பங்கேற்பு

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் 8,500 அரசுத் துறை அலுவலர்கள், 2,500 போலீஸார் என மொத்தம்

நாமக்கல் மாவட்டத்தில் மக்களவைத் தேர்தல் பணியில் 8,500 அரசுத் துறை அலுவலர்கள், 2,500 போலீஸார் என மொத்தம் 11 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர். அவர்களுக்கான பணி நியமன உத்தரவு புதன்கிழமை வழங்கப்பட்டது.
நாமக்கல் மாவட்டத்தில் நாமக்கல்,  சேந்தமங்கலம் (தனி), ராசிபுரம் (தனி), பரமத்திவேலூர், திருச்செங்கோடு, குமாரபாளையம் உள்ளிட்ட 6 சட்டப்பேரவைத் தொகுதிகள் உள்ளன. மக்களவைத் தொகுதி கணக்கின்படி, குமாரபாளையம் ஈரோடு தொகுதியிலும், சேலம் மாவட்டம் சங்ககிரி, நாமக்கல் தொகுதியிலும் இடம் பெற்றுள்ளன.
ஒவ்வொரு சட்டப்பேரவைத் தொகுதியிலும், தேர்தல் பணியில் ஈடுபடும் மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை ஒன்று முதல் நான்கு வரையிலான  அலுவலர்களுக்கான முதல் கட்டப் பயிற்சி முகாம், கடந்த மாதம் 24-ஆம் தேதி, இரண்டாம் கட்டப் பயிற்சி முகாம் ஏப்.7-ஆம் தேதி, மூன்றாம் கட்டப் பயிற்சி முகாம் ஏப்.13-ஆம் தேதியும் நடைபெற்றன. சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக நடைபெற்ற பயிற்சி முகாமில், 8,500 ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் பங்கேற்றனர்.
இதையடுத்து நாமக்கல் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி, ராசிபுரம் எஸ்.ஆர்.வி. மெட்ரிக் பள்ளி, சேந்தமங்கலம் வேதலோக வித்யாலயா, பரமத்திவேலூர் கொங்கு மெட்ரிக் பள்ளி, திருச்செங்கோடு கே.எஸ்.ஆர். கல்லூரி, குமாரபாளையம் ஸ்ரீ ராகவேந்திரா பாலிடெக்னிக் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்ற நான்காம் கட்டப் பயிற்சி முகாமில், தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. ஒவ்வொரு தொகுதிக்கும், பணிக்கு ஆள்கள் வராத பட்சத்தில், 200-க்கும் மேற்பட்ட கூடுதல் பணியாளர்கள் தயார் நிலையில் இருந்தனர்.
அதன்படி, ராசிபுரம் தொகுதியில் 1,400 அலுவலர்கள், சேந்தமங்கலத்தில் 1,308, நாமக்கல்லில் 1,820, பரமத்திவேலூரில் 1,228, திருச்செங்கோட்டில் 1,733, குமாரபாளையத்தில் 1,011 என மொத்தம் 8,500 பேருக்கு(கூடுதல் பணியாளர்களையும் சேர்த்து) பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இவர்கள் தவிர தேர்தல் பணியில் பங்கேற்கும் போலீஸார், முன்னாள் படைவீரர்கள், ஊர்க்காவல் படையினர், ஓய்வு பெற்ற போலீஸார் உள்ளிட்ட 2,500 பேருக்கும் பணி ஆணை வழங்கப்பட்டு பாதுகாப்பு பணிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
தேர்தல் பணியில், மண்டல அலுவலர்கள், வாக்குச்சாவடி நிலை 1, 2, 3 அலுவலர்கள்  தலா 1,951 பேர் ஈடுபடுகின்றனர். 112 பேர் வாக்குச்சாவடி 4-ஆம் நிலை அலுவலர்கள் பணியாற்றவுள்ளனர். புதன்கிழமை பணி ஆணை வழங்கப்பட்டதை தொடர்ந்து, வாக்குப்பதிவு இயந்திரங்கள் சென்ற வாகனம் மற்றும் தங்களது சொந்த வாகனங்களில் வாக்குச்சாவடிகளுக்கு அலுவலர்கள் சென்றனர். 
இரவு முழுவதும் வாக்குச்சாவடி பகுதியில் தங்கியிருக்கும் அலுவலர்கள் வியாழக்கிழமை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரையில் பணியில் ஈடுபடுகின்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com