வருமான வரி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு அதிகரித்து வருகிறது : மண்டல முதன்மை ஆணையர்

வருமான வரி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது என்று வருமான வரித் துறையின் தமிழ்நாடு,  புதுச்சேரி மண்டல முதன்மை ஆணையர் முரளிக்குமார் தெரிவித்தார்.


வருமான வரி செலுத்த வேண்டும் என்ற விழிப்புணர்வு பொதுமக்களிடையே அதிகரித்து வருகிறது என்று வருமான வரித் துறையின் தமிழ்நாடு,  புதுச்சேரி மண்டல முதன்மை ஆணையர் முரளிக்குமார் தெரிவித்தார்.
திருச்செங்கோட்டில்,  ஈரோடு பிரதான சாலையில் வருமான வரித் துறை அலுவலகம்  திறப்பு விழா புதன்கிழமை நடைபெற்றது.  இந் நிகழ்ச்சியில், வருமான வரித் துறையின் தமிழ்நாடு, புதுச்சேரி   மண்டல  முதன்மை ஆணையர் முரளிக்குமார்  தலைமை வகித்து, அலுவலகத்தைத் திறந்து வைத்தார்.  சென்னை தலைமை ஆணையர் சங்கரன் முன்னிலை வகித்தார். 
விழாவில்,   தலைமை முதன்மை ஆணையர் முரளிக்குமார் பேசியது:   தமிழ்நாடு, புதுச்சேரியில்  44 லட்சம் பேர் வருமான வரி செலுத்தி வருகின்றனர்.  இந்த ஆண்டு மட்டும்  9.5 லட்சம் பேர் புதிதாக வருமான வரி செலுத்தியுள்ளனர். வருமான வரியை முறையாகச் செலுத்த பொதுமக்களிடையே  விழிப்புணர்வு  அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். நாமக்கல் மாவட்டத்தில்  உள்ள 7 தாலுகாக்களிலும் ஆண்டுக்கு ரூ.330 கோடி வருமான வரியாகக் கிடைக்கிறது.  இதில் மூன்றில் 2 பங்கை திருச்செங்கோடு மற்றும் குமாரபாளையம் தாலுகாக்களே தருகின்றன.  சேலம் சரகம் தனது இலக்கைத் தாண்டி வெற்றிகரமாகச் செயல்பட்டிருக்கிறது. இப் பகுதியில் 40 ஆயிரம் பேர் வருமான வரி செலுத்துகின்றனர். இந்த ஆண்டு புதிதாக 6,500 பர் இதில் இணைந்துள்ளனர். 
     வருமான வரித் துறை டிஜிட்டல் முறைக்கு மாறியுள்ளது.  இதன்மூலம் 0.38 சதம் விண்ணப்பங்கள் மட்டுமே ஆய்வுக்கு உட்படுத்தப்படுகின்றன.   சிறந்த தரமான சேவையை அளிக்கவும் வருமான வரித் துறை நடவடிக்கை எடுத்து வருகிறது.  மனித நேயத்துடன் புன்னகையுடன் சேவையை அளிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.  வரி செலுத்துவோர் காத்திருக்கத் தேவையின்றி,  வாடிக்கையாளர் சேவை மையங்கள் ஒவ்வோர் அலுவலகத்திலும் நிறுவப்பட்டு வருகின்றன. 
இந்தியாவில் மாவட்டத் தலைநகரங்களில் மட்டுமே வருமான வரித் துறை அலுவலகம் நிறுவப்படுகிறது. ஆனால் மாவட்ட தலைமையகங்களாக இல்லாத திருச்செங்கோடு,  கும்பகோணம், ஒசூர் ஆகிய மூன்று இடங்களிலும் வருமான வரித் துறை அலுவலகம்  திறக்கப்பட்டுள்ளது.  வருமான வரித் துறையினர் என்று கூறிக்கொண்டு போலியான ஆள்கள் வந்தால் அடையாள அட்டையைக் காட்டுமாறு கேட்கலாம்.  அல்லது எங்களது கட்டணமில்லா தொலைபேசி  எண்ணில் தொடர்பு கொண்டு விளக்கங்களை அறிந்து கொள்ளலாம் என்றார்.
     விழாவில்,  வருமான வரித் துறையின் சேலம் முதன்மை ஆணையர் மீனா,   திருச்சி தலைமை ஆணையர் பிரோமத் நாங்கியா,  சேலம் மேல்முறையீட்டு ஆணையர் பரமசிவய்யா, நாமக்கல் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அர. அருளரசு,ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com