விசைத்தறித் தொழிலாளர்கள் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர திமுக வலியுறுத்தல்
By DIN | Published On : 26th April 2019 02:58 AM | Last Updated : 26th April 2019 02:58 AM | அ+அ அ- |

குமாரபாளையத்தில் கூலியுயர்வு கோரி கடந்த 25 நாள்களாக விசைத்தறித் தொழிலாளர்கள் நடத்தி வரும் வேலைநிறுத்தப் போராட்டத்துக்கு பேச்சுவார்த்தையின் மூலம் சுமுகத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என திமுக வலியுறுத்தியுள்ளது.
இதுகுறித்து, திமுக மாவட்டத் துணைச் செயலர் எஸ்.சேகர், நகரச் செயலர் கோ.வெங்கடேசன் ஆகியோர் தலைமையில் திமுகவினர் குமாரபாளையம் வட்டாட்சியர் தங்கத்திடம் வியாழக்கிழமை அளித்த மனு விவரம் : குமாரபாளையத்தில் கடந்த 25 நாள்களாக விலைவாசி உயர்வுக்கேற்ப கூலியுயர்வு வழங்கக் கோரி விசைத்தறித் தொழிலாளர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப்போராட்டத்தால் விசைத்தறித் தொழிலும், ஜவுளி உற்பத்தியும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், விசைத்தறி நெசவுத் தொழிலாளர் குடும்பங்களுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளதோடு, வறுமையின் பிடிக்குத் தள்ளப்பட்டுள்ளனர். மக்களவைத் தேர்தல் நடைபெற்ற நிலையில் இப்பிரச்னையில் எவ்வித முடிவும் காண முடியாத நிலை இருந்தது.
தற்போது இத்தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் தொழிலாளர், கூலிக்கு நெசவு செய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் மற்றும் ஜவுளி உற்பத்தியாளர்களை அழைத்துப் பேசி, இப்பிரச்னைக்குத் தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.