கொண்டிச்செட்டிப்பட்டி ஏரி சீரமைப்புப் பணி தொடக்கம்

நாமக்கல் அருகே  கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியை தூர்வாரி  மழை நீர் தேக்கும் வகையிலான சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.

நாமக்கல் அருகே  கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியை தூர்வாரி  மழை நீர் தேக்கும் வகையிலான சீரமைப்புப் பணி ஞாயிற்றுக்கிழமை தொடங்கியது.
தமிழகம்  முழுவதும்  ஏரி,  குளங்கள், அணை பகுதிகளை தூர்வாரும் வகையிலான குடிமராமத்துப் பணிகள் விவசாயிகள் சங்கம் மூலமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதில்,  அரசு சார்பிலும்,  விவசாய சங்கங்கள் தரப்பிலும்  நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இந்த மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமின்றி,  தன்னார்வலர்கள் மூலமும் ஏரிகள் சீரமைப்புப் பணி நடைபெறுகிறது.  அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில், சிங்களாந்தபுரம் ஏரி,  காரவள்ளி ஏரிகளைச் சீரமைக்கும் பணிகள் அண்மையில் நடைபெற்றன.
இந்த நிலையில்,  நாமக்கல் - மோகனூர் சாலையில் உள்ள 18 ஏக்கர் பரப்பளவு கொண்ட கொண்டிச்செட்டிப்பட்டி ஏரியானது கழிவுகள் தேங்கும்  இடமாக மாறிப்போனது. இதைத் தூர்வார வேண்டும் என பொதுமக்களும்,  தன்னார்வலர்களும் மாவட்ட நிர்வாகத்துக்கும், நகராட்சிக்கும்  கோரிக்கை விடுத்து வந்தனர். இந்த நிலையில், ஏரியை தூர்வாரி,  சீரமைத்து மரக்கன்றுகள் நடவு செய்வதற்கு, அகில இந்திய கட்டுமானப் பொறியாளர்கள் சங்கம் மற்றும் அப்பகுதி மக்கள்,  தன்னார்வலர்கள் முடிவு செய்தனர்.
அதன்  தொடக்க விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. நாமக்கல் சட்டப்பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர்  பணியைத் தொடக்கி வைத்தார். இதில், கட்டுமானப் பொறியாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். இப்பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு,  ஓரிரு மாதங்களில் முடிவடையும் என்றும், மழையை பெறும் வகையில் ஏரிக்கரையோரங்களில் நூற்றுக்கணக்கான மரக்கன்றுகளை நடவு செய்து, பராமரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com