நாளை சுதந்திர தினம்: கலைநிகழ்ச்சி ஒத்திகை

சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள் ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது

சுதந்திர தினத்தையொட்டி, நாமக்கல் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் கலைநிகழ்ச்சிகள் ஒத்திகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
 நாட்டின் 73-ஆவது சுதந்திர தின விழா வியாழக்கிழமை(ஆகஸ்ட் 15) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் உள்ள விளையாட்டு மைதானத்தைத் தயார் செய்யும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இங்குள்ள புல், புதர்கள் பொக்லைன் கொண்டு அகற்றி தூய்மைப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், கொடிக்கம்பத்துக்கு வர்ணம் பூசுதல், பார்வையாளர்கள் அமருவதற்கான காலரிகளை சீரமைக்கும் பணி உள்ளிட்டவை நடைபெறுகின்றன.
 ஏற்கெனவே, துப்பறியும் நாய்களின் சாகச நிகழ்ச்சி ஒத்திகை, போலீஸாரின் அணிவகுப்பு மரியாதை ஒத்திகை ஆகியன நடைபெற்ற நிலையில், செவ்வாய்க்கிழமை காலை அரசு - தனியார் பள்ளி மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சி ஒத்திகையானது நடைபெற்றது. இவர்கள் பல்வேறு தேசப் பக்தி பாடல்களுக்கு தகுந்தவாறு நடமானடி தீவிரப் பயிற்சி மேற்கொண்டனர். இதில், நூற்றுக்கணக்கான மாணவ, மாணவியர் கலந்து கொண்டனர்.
 ஆட்சியர் கொடியேற்றுகிறார்... நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில், வியாழக்கிழமை காலை 9.05 மணிக்கு மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் தேசியக் கொடியை ஏற்றி வைக்கிறார்.
 பின்னர், காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்கும் அவர் சுதந்திரப் போராட்ட தியாகிகளை கௌரவிக்கிறார். இதையடுத்து, அரசு சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகளையும், சிறப்பாகப் பணியாற்றிய அரசு அலுவலர்களுக்கு நற்சான்றிதழ்களையும் வழங்க உள்ளார். இதைத் தொடர்ந்து, கலைநிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
 விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என மாவட்ட வருவாய் அலுவலர் துரை.ரவிச்சந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com