மேட்டூர் அணை திறப்பு: காவிரி கரையோரத்தில் வசிப்போருக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 

மேட்டூர் அணை திறக்கப்பட்டுள்ளதையடுத்து, நாமக்கல் மாவட்டத்தில் காவிரி கரையோரங்களில் வசிக்கும் மக்களுக்கு மாவட்ட நிர்வாகம் தரப்பில் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. 
கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால், கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து சுமார் 2.50 லட்சம் கனஅடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. இதனால் மேட்டூர் அணையின் நீர்மட்டம் 100 அடியைக் கடந்துள்ளதால், அணையில் இருந்து தண்ணீர் செவ்வாய்க்கிழமை திறக்கப்பட்டது. 
ஆரம்பத்தில் 2 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கும் நிலையில், அதிகபட்சம் 50 ஆயிரம் கனஅடி வரை திறப்பதற்கான வாய்ப்புள்ளது. இதனால், காவிரி ஆறு பாயும் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட ஆட்சியர் மூலம் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், நாமக்கல் மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது;- கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் எவரும் உரிய பாதுகாப்பின்றி காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள், நீர்நிலைகளில் குளிக்கவோ, நீச்சல் அடித்தல், மீன்பிடித்தல் போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். 
அபாயகரமான பகுதிகளில் நின்று செல்லிடப்பேசியில் புகைப்படம் எடுத்தல் கூடாது. குழந்தைகள் காவிரி ஆற்றுப்படுகை, கால்வாய்கள் மற்றும் நீர்நிலைகளில், இறங்கிடாத வகையில் பொதுமக்கள் மற்றும் பெற்றோர்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேட்டூர் அணையில் இருந்து வெளியேற்றப்படும் நீரின் அளவுகுறித்து பொதுமக்களுக்கு அவ்வப்போது தகவல் தெரிவிக்கப்படும். காவிரி கரையோர கிராமங்கள் வெள்ள நீரால் அதிகம் பாதிக்கப்படக்கூடியவை என்பதால், மாவட்ட அளவில் நியமனம் செய்யப்பட்டுள்ள பேரிடர் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும். ஆற்றின் கரையோர கிராமங்களின் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும், கவனத்துடனும், பாதுகாப்பான இடங்களுக்கும், மாவட்ட நிர்வாகத்தால் ஏற்படுத்தப்பட்டுள்ள நிவாரண முகாம்களுக்கும் உடனடியாகச் செல்ல வேண்டும். பாதிக்கப்படக் கூடிய பகுதிகளில் உள்ள பொதுமக்கள், அவசர கால உதவிக்கு உரிய அரசுத் துறை அலுவலர்களை தொடர்பு கொள்ளலாம் என்றார் ஆட்சியர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com