பொத்தனூரில் குடிமராமத்து திட்ட பணிகள் குறித்து கலந்தாய்வுக் கூட்டம்

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் குடிமராமத்து திட்ட பணிகள் குறித்து விவசாயிகளுடனான

பரமத்தி வேலூர் அருகே உள்ள பொத்தனூரில் குடிமராமத்து திட்ட பணிகள் குறித்து விவசாயிகளுடனான கலந்தாய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.  இதில் கலந்து கொண்ட மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் பொதுப்பணித் துறையினர் உறுதியளித்தபடி ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை.  எனவே ராஜா வாய்க்கால் தூர் வாரும் பணியைத் தொடங்காமல் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
குடிமராமத்து திட்டத்தின் கீழ் ஜேடர்பாளையம் இருந்து நன்செய் இடையாறு வரை செல்லும் ராஜா வாய்க்காலில் புனரமைப்புப் பணிக்காக ரூ.2 கோடியே 41 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகின்றன. பணிகள் துவங்கி 50 நாட்கள் ஆகியும் இதுவரை பணிகள் நிறைவடையாத நிலையில் விவசாயிகள் ஒன்று கூடி பரமத்தி வேலூர் பொதுப்பணித் துறை அலுவலகத்தில் கடந்த 8-ஆம் தேதி முற்றுகையிட்டு, ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.  விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்திய பொதுப்பணித் துறையினர் குடிமராமத்துப் பணிகள் நிறைவு செய்யப்பட்டு 14-ஆம் தேதி ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கப்படும் என உறுதியளித்தார். 
இதனையடுத்து அங்கிருந்து விவசாயிகள் கலைந்து சென்றனர்.  ஆனால் மேட்டூர் அணையில் இருந்து 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்துவிடப்பட்ட நிலையில், இதுவரை ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை.  இந்த நிலையில் பொத்தனூரில் குடிமராமத்து திட்ட பணிகள் குறித்து விவசாயிகளுடனான கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது.  இக் கூட்டத்தில் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ஆசியா மரியம் மற்றும் பொதுப்பணித் துறையினர் கலந்து கொண்டு விவசாயிகளுடன் கலந்தாய்வு நடத்தினர். கூட்டத்தில் பேசிய விவசாயிகள் பொதுப்பணித்துறையினர் அறிவித்தப்படி 14-ஆம் தேதி ராஜா வாய்க்காலில் தண்ணீர் திறக்கவில்லை எனவும், பெயர் அளவில் பாசனதாரர் விவசாய சங்கம் மூலம் குடிமராமத்து பணிகள் செய்வதாக கூறி, ஒப்பந்ததாரர் மூலம் நடைபெற்று வரும் புனரமைக்கும் பணிகளை குறிப்பிட்ட நேரத்தில் முடிக்கவில்லை என குற்றம்சாட்டினர்.
50 நாட்கள் ஆகியும் இதுவரை முழுமையாக முடிக்கப்படவில்லை என விவசாயிகள் கூறியதால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.  மேலும் ராஜா வாய்க்காலில் தூர்வாரும் பணியை தற்பொழுது தொடங்குவதை கைவிட வேண்டும் என வலியுறுத்தினர்.  வாடும் பயிர்களைக் காக்க ராஜா வாய்க்காலில் உடனடியாக தண்ணீர் திறக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். 
பின்னர், மாவட்ட ஆட்சியர் பாசனதாரர் விவசாய சங்கம் மூலம் நடைபெற்று வரும் அனைத்து குடிமராமத்துப் பணிகளை நேரில் பார்வையிட்டார்.  ஆய்வின் போது பொதுப்பணித் துறை நீர்வள ஆதாரத் துறை சரபங்கா வடிநில கோட்ட செயற்பொறியாளர் கெளதமன், பரமத்தி வேலூர் வட்டாட்சியர் செல்வராஜ் மற்றும் ராஜா வாய்க்கால் விவசாயிகள் சங்கத்தினர் உடன் இருந்தனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com