விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் கள் இயக்கம் போட்டியிடும்: நல்லசாமி அறிவிப்பு

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் கள் இயக்கம் போட்டியிடும் என்று  தமிழ்நாடு விவசாயிகள்

விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் கள் இயக்கம் போட்டியிடும் என்று  தமிழ்நாடு விவசாயிகள் சங்கங்களின் கூட்டமைப்புச் செயலாளரும் கள் இயக்க  ஒருங்கிணைப்பாளருமான நல்லசாமி திருச்செங்கோட்டில்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அவர் மேலும் கூறியது,
108 நாடுகளில் பனை தென்னை மரங்கள் உள்ளன.  அவற்றிலிருந்து கள் எடுக்கப்பட்டு பயன்படுத்தப்படுகிறது.  கள் ஓர் உணவுப் பொருள். போதைப் பொருள் அல்ல. கள் உணவுப் பொருள் அல்ல என நிரூபிப்பவர்களுக்கு ரூ 10 கோடி தர கள் இயக்கம் தயாராக உள்ளது.   விக்கிரவாண்டி, நாங்குநேரி இடைத்தேர்தல்களில் கள் இயக்கம் போட்டியிடும். எதிராகப் போட்டியிடும் அரசியல் கட்சிகள் கள் உணவுப்பொருள் அல்ல என நிரூபித்தால், போட்டியிலிருந்து கள் இயக்கம் விலகிக் கொள்ளும். ரூ 10 கோடி பரிசையும் தரும்.
உள்ளாட்சி அமைப்புகள் ஜனநாயகத்தின் அடித்தளங்கள்.  உள்ளாட்சி அமைப்புக்களில் கொள்கை முடிவுகள் ஏதும் எடுக்கப்படுவதில்லை.  நாடாளுமன்றம், சட்ட மன்றத்தில் எடுக்கப்படும் கொள்கை முடிவுகளை நடைமுறைப்படுத்தும் இடங்களே இவை.  அரசியல் கட்சி தலையீடு இல்லாமல் உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்பட வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தல் வேட்பாளர் அனைவருக்கும் சுயேச்சை சின்னங்களே ஒதுக்க வேண்டும்.  உள்ளாட்சித் தேர்தலை இந்திய தேர்தல் ஆணையமே  நடத்த வேண்டும்.    ஆரம்பக் கல்வி, சுகாதாரம்,  வேளாண்மை, கால்நடை மேம்பாடு ஆகியவற்றை உள்ளாட்சி அமைப்புகளிடம் ஒப்படைக்க வேண்டும்.
தமிழக இரசு இலவசத் திட்டங்களைக் கைவிட்டு  தொலை நோக்குப் பார்வையுடன் கூடிய திட்டஙகளைச் செயல்படுத்த வேண்டும்.  மேட்டூர் உபரி நீரை கால்வாய் மூலம் திருமணி முத்தாறு,  வசிஷ்ட நதி , சரபங்கா ஆகியவற்றுடன் இணைத்தால் பல ஆயிரம் ஏக்கர் பாசன வசதி பெறும்.  ஏரி குளங்கள் நிரம்பி நிலத்தடி நீர் மட்டம் உயரும். வீணாகக் கடலில் கலக்கும் நீர் மக்களுக்குப்  பயன்படும் என்றார் அவர். 
தமிழக விவசாயிகள் சங்க மாவட்டத்தலைவர் ராமசாமி, தென்னிந்திய நதிகள் இணைப்பு மக்கள் இயக்கத் தலைவர் முத்துசாமி,  காலிங்கராயன் சிறு விவசாயிகள் தொழிலாளிகள் நலச் சங்க பொதுச் செயலாளர் பாம்பண்ணன் ஆகியோர் உடனிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com