சிறு, குறு விவசாயிகளின் நலனுக்கானது பிரதம மந்திரி கிசான் மான்தன் திட்டம்!

சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக, பிரதம மந்திரி கிசான் மான்தன் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது.
சிறு, குறு விவசாயிகளின் நலனுக்கானது பிரதம மந்திரி கிசான் மான்தன் திட்டம்!

சிறு, குறு விவசாயிகளின் நலனுக்காக, பிரதம மந்திரி கிசான் மான்தன் திட்டம் மத்திய அரசால் தொடங்கப்பட்டுள்ளது. வேளாண் பயிர் சாகுபடியில் ஈடுபட்டு வரும் சிறு, குறு விவசாயிகளுக்கு, அவர்களின் முதுமைக் காலத்தில் சமூக வாழ்வாதாரத்தை ஏற்படுத்தித் தந்து, சுய மதிப்புடன் வாழ வழிவகை செய்யும் பொருட்டு, பிரதம மந்திரி கிசான் மான்தன் திட்டம், இந்திய அரசின் வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகத்தின் மூலம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
 முதுமையில் வேலை செய்ய இயலாதபோது, அவர்கள் சேமித்த தொகையானது மத்திய அரசின் பங்களிப்போடு மாதந்தோறும் ஓய்வூதியமாக வாழ்நாள் வரை திரும்பக் கிடைக்கும். இத் திட்டத்தில் ஆயுள் காப்பீட்டு நிறுவனம், ஓய்வூதிய நிதி மேலாளராக இருந்து ஓய்வூதியம் வழங்கும் பணியினை மேற்கொள்ளும். இந்தத் திட்டத்தில் 5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் உள்ள 18 முதல் 40 வயது வரை உள்ள சிறு, குறு விவசாயிகள் தங்களைப் பதிவு செய்து கொள்ளலாம். விவசாயிகள் தங்கள் வயதிற்கேற்ப ஒவ்வொரு மாதமும் ரூ.55 முதல் ரூ.200 வரை செலுத்தி, பொது சேவை மையம் மூலம் பதிவு செய்துகொள்ள வேண்டும். அவர்கள் 60 வயது அடையும் வரை இத் தொகையினை மாதந்தோறும் அல்லது 3 மாதம் அல்லது 6 மாதம் அல்லது ஒரு வருடம் என விவசாயிகள் வசதிக்கேற்ப வங்கிக் கணக்கு மூலம் இத் தொகையினைச் செலுத்தலாம்.
 அதற்கு நிகரான தொகையை மத்திய அரசு விவசாயி கணக்கில் செலுத்தும். 60 வயது பூர்த்தியடைந்த பின் இக் கணக்கிலிருந்து ஓய்வூதியமாக வாழ்நாள் முழுவதும், மாதந்தோறும் ரூ.3 ஆயிரம் வழங்கப்படும். ஒரு குடும்பத்தில் உள்ள கணவன், மனைவி என இருவரும் இந்த ஓய்வூதியத் திட்டத்தில் தனித்தனியாக இணைந்து கொள்ளலாம். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சந்தா தொகை செலுத்திய விவசாயி ஒருவர் விரும்பினால், இத் திட்டத்திலிருந்து விலகிக் கொள்ளலாம். அன்றைய தேதி வரை அவர் செலுத்திய தொகை முழுவதும் உரிய சேமிப்புக் கணக்கில் வட்டியுடன் திரும்ப வழங்கப்படும்.
 இத் திட்டம் முதிர்ச்சியடையும் காலத்திற்கு முன் எதிர்பாராத விதமாக விவசாயி இறக்கும்பட்சத்தில், அவரின் மனைவி இதில் சந்தாதாரராக இல்லாதபட்சத்தில், அவரது விருப்பத்தின் அடிப்படையில் தொடர முடியும். அவ்வாறு தொடர விருப்பம் இல்லையெனில், விவசாயி அதுவரை கட்டிய தொகை சந்தாதாரரின் மனைவிக்கு அல்லது மனைவி இல்லாதபட்சத்தில் சந்தாதாரரின் வாரிசுக்கு வட்டியுடன் திரும்ப அளிக்கப்படும். மேலும், விவசாயி இத் திட்ட காலத்திற்குப் பிறகு இறக்கும் பட்சத்தில், அவரின் மனைவி அல்லது வாரிசுதாரருக்கு திட்ட ஓய்வூதியப் பலனில் 50 சதவீதம் அதாவது மாதம் ரூ.1,500 வீதம் அவரது இறுதிக் காலம் வரையில் கிடைக்கும். தகுதியான சிறு, குறு விவசாயிகள் அருகில் உள்ள பொது சேவை மையத்தை அணுகி, ஆதார் அட்டை, வங்கிக் கணக்கு மற்றும் வாரிசுதாரரின் ஆதார் அட்டை விவரங்களைக் கொண்டு இணையதளத்தில் பதிவு செய்து பயன்பெறலாம். ஏற்கெனவே, பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளின் விவரங்கள் அனைத்தும் இத் திட்டத்திற்கு எடுத்துக் கொள்ளப்படும். தவணைத் தொகையினை சந்தாதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து, சந்தாதாரரின் விருப்பத்தின் அடிப்படையில் சந்தாவைச் செலுத்தலாம். மேலும், விவசாயி விரும்பும் பட்சத்தில் பிரதம மந்திரி கிசான் சம்மான் நிதித் திட்டத்தின் மூலம் பெறப்பட்ட நிதியிலிருந்து நேரடியாக சந்தா செலுத்தும் வசதியும் இத் திட்டத்தில் உள்ளது.
 கீழ்க்கண்ட விவசாயிகள் இத் திட்டத்தில் பயன்பெறத் தகுதியற்றவர்கள்: நிறுவன நில உரிமையாளர்கள். குடும்பத்தில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்டவர்கள், முன்னாள் மற்றும் இந் நாள் அரசியலமைப்பு பணியில் இருத்தல், மத்திய, மாநில அமைச்சர்கள், மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், மாநகராட்சி மேயர்கள், மாவட்ட பஞ்சாயத்துத் தலைவர்கள், அரசுப் பணியில் உள்ளவர்கள், ரூ.10 ஆயிரத்துக்கு மேல் ஓய்வூதியம் பெறுபவர்கள், வருமான வரி செலுத்தியவர்கள், மருத்துவர்கள், பொறியாளர்கள், வழக்குரைஞர்கள் போன்ற பதிவு செய்து தொழில் செய்பவர்கள், மத்திய மற்றும் மாநில அரசின் பிற ஓய்வூதியத் திட்டங்களில் இணைந்தவர்கள். எனவே, சிறு, குறு விவசாயிகள் இத் திட்டத்தினை நல்ல முறையில் பயன்படுத்தி தங்களது முதுமைக் காலத்தின் பாதுகாப்பினை உறுதி செய்துகொள்ளுமாறு மத்திய வேளாண் துறை அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com