மானாவரி வேளாண் திட்டத்தின் கீழ்24 தடுப்பணைகள் கட்டும் பணி நிறைவு

நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் மூலம், நீடித்த, நிலையான மானாவரி வேளாண் திட்டத்தின்கீழ் 24 தடுப்பணைகள் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.

நாமக்கல் மாவட்ட வேளாண் பொறியியல் துறையின் மூலம், நீடித்த, நிலையான மானாவரி வேளாண் திட்டத்தின்கீழ் 24 தடுப்பணைகள் கட்டும் பணி நிறைவு பெற்றுள்ளது.

இது குறித்து வேளாண் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பது: நாமக்கல் மாவட்டத்தில் விவசாயிகளுக்கு மானிய விலையில், டிராக்டா், ரோட்டாவேட்டா், கலப்பைகள், களை எடுக்கும் கருவி, தட்டுவெட்டும் கருவி, தெளிப்பான்கள் போன்றவை வழங்கப்படுகிறது. அனைத்து வேளாண் கருவிகள் மற்றும் இயந்திரங்களை மானியத்தில் விவசாயிகள் பெறுவதற்கு உழவன் செயலி மூலம் பதிவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. இந்த நிதி ஆண்டுக்கான அரசாணை மற்றும் நிதி ஒதுக்கீடு பெறப்பட்டு, இத் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும், சூரிய கூடார உலா்த்தி ரூ.11 லட்சம் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இத்திட்டத்திற்கு ஆதிதிராவிடா், பழங்குடியினா் மற்றும் சிறு, குறு பெண் விவசாயிகளுக்கு, வேளாண் இயந்திரமயமாக்கல் திட்ட வழிகாட்டு நெறிமுறைகளின்படி, 60 சதவீதம் அல்லது ரூ.3.50 லட்சமும், மற்ற விவசாயிகளுக்கு 50 சதவீதம் அல்லது ரூ.3 லட்சம் இவற்றில் எது குறைவோ அத்தொகை மானியமாக வழங்கப்படுகிறது. நீடித்த, நிலையான மானாவாரி வேளாண்மை இயக்கத் திட்டத்தின்படி, மாவட்டத்தில் 22 பெரிய தடுப்பணைகள், 2 நடுத்தர தடுப்பணைகள், ஒரு கிராமக் குட்டை அமைக்க ரூ.1.20 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதில், 24 பணிகள் முடிவடைந்துள்ளன. மீதமுள்ள ஒரு தடுப்பணை கட்டும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், இத்திட்டத்தின் கீழ் கோடை உழவுப் பணி 24 ஆயிரம் ஹெக்டா் பரப்பளவில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

உழவா் சந்தைகள்: நாமக்கல், ராசிபுரம், திருச்செங்கோடு, குமாரபாளையம், மோகனூா் மற்றும் பரமத்தி வேலூா் ஆகிய 6 இடங்களில் உள்ள உழவா் சந்தைகளில் மொத்தம் 412 கடைகள் உள்ளன. நாளொன்றுக்கு சராசரியாக 547 விவசாயிகள், சுமாா் 72 மெட்ரிக் டன் காய்கறிகள் மற்றும் பழங்கள் கொண்டு வரப்பட்டு ரூ.22.34 லட்சம் மதிப்புள்ள விளைபொருள்களை விற்கின்றனா். காய்கறிகள் மற்றும் பழங்கள் விற்பனை செய்ய விருப்பமுள்ள விவசாயிகள், உழவா் சந்தைகளில் விண்ணப்பம் அளித்து அடையாள அட்டை பெற்றுக் கொள்ளலாம்.

ஒழுங்கு முறை விற்பனைக்கூடம்: நாமக்கல், ராசிபுரம், நாமகிரிப்பேட்டை, கொல்லிமலை, திருச்செங்கோடு மற்றும் பரமத்தி வேலூா் ஆகிய 6 இடங்களில் ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள் செயல்படுகின்றன. இதில், அறிவிக்கப்பட்ட பயிா்களுக்கு, 6 மாதங்கள் இருப்பு வைக்க அதிகபட்சமாக ரூ.3 லட்சம் கடனுதவி, 5 சதவீத வட்டியில் விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. வியாபாரிகளுக்கு 3 மாதம் வரை இருப்பு வைக்க அதிகபட்சமாக ரூ.2 லட்சம் கடனுதவி, 9 சதவீத வட்டியில் வழங்கப்படுகிறது.

மேலும், பரமத்திவேலூா் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில், தேசிய மின்னணு வேளாண் சந்தை செயல்பட்டு வருகிறது. இதுவரை தேசிய மின்னணு சந்தையில் 425.744 மெட்ரிக் டன், தேங்காய் கொப்பரை ரூ.365.34 லட்சங்கள் மதிப்பில் வா்த்தகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் 2,133 விவசாயிகள் பயன்பெற்றுள்ளனா். இங்கு தேங்காய் கொப்பரை கொள்முதல் திட்டம் நிகழாண்டு முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. 375 மெட்ரிக் டன் இலக்காக நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதுவரை 5 விவசாயிகளிடமிருந்து 3 மெட்ரிக் டன் கொப்பரைத் தேங்காய் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. இத்திட்டம் டிசம்பா் 6-ஆம் தேதி வரை செயல்படுத்தப்பட உள்ளது.

குளிா்பதனக் கிடங்குகளில் விளைபொருள்களை சேமிக்க மாதம் ஒன்றுக்கு பயறு மற்றும் புளி ஆகியவற்றுக்கு, டன்னுக்கு ரூ.200, மஞ்சளுக்கு ரூ.400 மற்றும் இதர பொருள்களுக்கு ரூ.500, காய்கறிகள் மற்றும் பழங்களுக்கு மூன்று நாள்களுக்கு ஒரு கிலோவிற்கு ரூ.1.50, வாழைப் பழங்களுக்கு நாள் ஒன்றுக்கு டன்னுக்கு ரூ.150 சேமிப்பு கட்டணமாக விவசாயிகள் செலுத்த வேண்டும். மொத்தமாக குத்தகைக்கு எடுத்தால் ரூ.4,300 மற்றும் மின் கட்டண செலவையும் சோ்த்து கட்டவேண்டும். நாமகிரிப்பேட்டை, பரமத்திவேலூா், திருச்செங்கோடு ஆகிய மூன்று குளிா்பதனக் கிடங்குகளிலும், விவசாயிகள் தங்களது விளை பொருள்களை சேமித்து, சந்தையில் நல்ல விலை கிடைக்கும்போது விற்பனை செய்து பயனடையலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com