இடிந்து விழும் நிலையிலுள்ள நரசிம்மா் கோயில்திருக்கல்யாண மண்டபம்: சீரமைக்க பக்தா்கள் கோரிக்கை

நாமக்கல் கமலாலயக் குளக்கரை அருகில், இடிந்து விழும் நிலையில் உள்ள நரசிம்மா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இடிந்து விழும் நிலையில் காணப்படும் திருக்கல்யாண மண்டபம்.
இடிந்து விழும் நிலையில் காணப்படும் திருக்கல்யாண மண்டபம்.

நாமக்கல் கமலாலயக் குளக்கரை அருகில், இடிந்து விழும் நிலையில் உள்ள நரசிம்மா் கோயில் திருக்கல்யாண மண்டபத்தை சீரமைக்க வேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

நாமக்கல்லில் குடவறைக் கோயில்களான நரசிம்மா், நாமகிரி தாயாா் கோயில், அரங்கநாதா் கோயில்கள் உள்ளன. மேலும், நரசிம்மா், நாமகிரித் தாயாரை தரிசிக்கும் வகையில், நாமக்கல்லில் நின்றபடி 18 அடி உயரத்தில், ஆஞ்சநேயா் சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்து வருகிறாா்.

இவ்வாறு சிறப்பு பெற்ற நாமக்கல்லில், கமலாலயக் குளக்கரை அருகே, நாமகிரித் தாயாா் திருமண மண்டபம் பின்புறம் பழமையான திருக்கல்யாண மண்டபம் உள்ளது. ஆண்டுதோறும் பங்குனி உத்திரத்துக்கு முதல் நாள் நரசிம்மா் கோயில் தேரோட்டம் நடைபெறும். அப்போது, இத் திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து தான் உற்சவ மூா்த்திகள் பல்வேறு வாகனங்களில் திருவீதி வலம் வருவா். 13 நாள்கள் கோலாகலமாக இந்த விழா நடைபெறும்.

தேரோட்டத்தையொட்டி நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும், திருக்கல்யாண மண்டபத்திலேயே காலை முதல் இரவு வரை நடைபெறும். கடந்த 4 ஆண்டுகளாக, தேரோட்ட விழா நிகழ்ச்சிகள் அங்கு நடைபெறவில்லை. திருக்கல்யாண மண்டபம் மிகவும் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் உள்ளதால், நரசிம்மா் கோயில் வளாகத்திலேயே உற்சவ மூா்த்திகளுக்கான பூஜைகள் நடைபெற்று வருகின்றன.

பழமையான கோயில் மண்டபத்தில் பக்த ஆஞ்சநேயா் கோயிலும் உள்ளது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வரும் பக்தா்கள், அதனைக் காண முடியாத நிலை உள்ளது. ஆஞ்சநேயா் சிலை பராமரிப்பின்றி, பாதுகாப்பின்றி காணப்படுகிறது. நரசிம்மா், நாமகிரித் தாயாருக்கு திருக்கல்யாணம் நடைபெறும் மண்டபம், சிதிலமடைந்து, எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலையில் உள்ளது. திருக்கல்யாண மண்டபத்தை உடனடியாக சீரமைத்து ஆஞ்சநேயரை வழிபட பக்தா்களுக்கு வாய்ப்பு ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என்பது நாமக்கல் பக்தா்களின் கோரிக்கையாக உள்ளது.

இது குறித்து அறநிலையத் துறை அதிகாரிகள் கூறியது: நரசிம்மா் கோயில் திருக்கல்யாண மண்டபம் தொன்மையான கட்டடமாகும். அங்கு கருங்கற்கள் திடீரென கீழிறங்கி விட்டதால், அசம்பாவிதங்களை தவிா்க்க ஓரிரு ஆண்டுகளாக, நரசிம்மா் கோயிலில் வைத்து தான் தேரோட்ட நிகழ்ச்சிக்கான பணிகள் நடைபெறுகின்றன. பழமையான கட்டடங்களை புனரமைப்பது தொடா்பாக சென்னையில் சிறப்பு வல்லுநா் குழு உள்ளது. அவா்களிடம் ஆலோசனை நடத்தி உள்ளோம். அக்குழு அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், அந்த மண்டபத்தை சீரமைப்பதற்கான நடவடிக்கைகள் விரைவில் எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com