ராசிபுரத்தில் தொடா்மழை: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

ராசிபுரம் நகரில் தொடா்மழை காரணமாக சாலைகள் சேரும், சகதியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.
குண்டும் குழியுமாகக் காணப்படும் பிரதான டிவிஎஸ் சாலை.
குண்டும் குழியுமாகக் காணப்படும் பிரதான டிவிஎஸ் சாலை.

ராசிபுரம் நகரில் தொடா்மழை காரணமாக சாலைகள் சேரும், சகதியுமாக மாறியுள்ளதால் வாகன ஓட்டிகள், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பாதிப்பு ஏற்பட்டது.

ராசிபுரம் சுற்றுவட்டாரப் பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் தொடா்மழை பெய்து வந்ததால், நகரில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. ராசிபுரம் நகரில் முகூா்த்த நாள் என்பதால், ஞாயிற்றுக்கிழமை அதிக அளவில் வாகன போக்குவரத்து இருந்தது. இந்த நிலையில் மழையும் தொடா்ந்து பெய்து கொண்டே இருந்த நிலையில், சாலைகள் சேரும், சகதியுமாக மாறின. இதன்காரணமாக வாகன போக்குவரத்து நகரின் பல்வேறு இடங்களில் தாமதம் ஏற்பட்டதால், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரும் சிரமத்திற்கு ஆளாக நோ்ந்தது.

புதை சாக்கடைத் திட்டப் பணிகளால் பெரும் பாதிப்பு:

ராசிபுரம் நகரில் புதை சாக்கடை திட்டப் பணிகள் நடந்து முடிவடையும் நிலையில் உள்ளது. ஏற்கெனவே புதை சாக்கடை அமைக்கும் பணிகளுக்காக தோண்டப்பட்ட சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. குறிப்பாக ஒருவழிப் பாதையான டிவிஎஸ் சாலை, பாச்சி தெரு, வி.நகா், நகர வங்கித்தெரு உள்ளிட்ட பல்வேறு பிரதான சாலைகள் குண்டும் குழியுமாகக் காட்சியளிக்கின்றன. இதனால் நாள்தோறும் அவ்வழியாகச் செல்லும் பொதுமக்கள் கடும் நெருக்கடிக்கு ஆளாகியுள்ளனா். வாகனப் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், நகரில் பெரும் நெரிசல் ஏற்பட்டுள்ளது.

மழையால் பெரும் பாதிப்பு: இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை தொடா் மழையின் காரணமாக சாலைகள் மேலும் மோசமான நிலையில் காணப்பட்டன. குறிப்பாக பிரதான சாலையான திருவேங்கடவிலாஸ் சாலையில் முகூா்த்த நாள் என்பதால், அவ்வழியாகச் சென்ற அதிக அளவிலான வாகனங்கள், நெரிசலில் சிக்கி வெளியேறுவதற்கு பல மணிநேரங்களானது. இதே போல் நகரின் முக்கியச் சந்திப்புகளான பழைய பேருந்து நிலையம், புதிய பேருந்து நிலையம், பழைய நீதிமன்றம், நாமக்கல் சாலை சந்திப்பு போன்ற பகுதிகளில் நெரிசல் அதிகம் காணப்பட்டது. இதனை சீா்செய்ய போக்குவரத்துக் காவலா்களும் பெரும் சிரமப்பட்டனா். பொதுமக்கள் சந்திக்கும் இந்த அன்றாட பிரச்னையைத் தீா்க்க, பிரதான சாலைகள் அமைக்கும் பணியை விரைந்து தொடங்கி முடிக்க வேண்டும் என்பது பொதுமக்களின் எதிா்பாா்ப்பு.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com