திருச்செங்கோடு குஞ்சு மாரியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை
By DIN | Published On : 28th February 2019 09:25 AM | Last Updated : 28th February 2019 09:25 AM | அ+அ அ- |

காந்தி நகர் குஞ்சு மாரியம்மன் கோயிலில் சுமங்கலி பூஜை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
திருச்செங்கோடு, நாமக்கல் சாலை காந்திநகரில் அமைந்துள்ள குஞ்சு மாரியம்மன் கோயிலில் துர்க்கை வார வழிபாட்டுக் குழு சார்பில் சுமங்கலி பூஜை நடைபெற்றது. வழிபாட்டுக் குழுவின் அமைப்பாளர் யசோதா கோபாலன் தலைமை வகித்து நடத்தினார்.காலையில் கணபதி ஹோமத்துடன் வேதபாராயணம், சுயம்வரா பார்வதி யாகம், ஐஸ்வர்ய மகாலட்சுமி யாகம், நடத்தப்பட்டது. பின்னர் குஞ்சு மாரியம்மனுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பிரகாரத்தில் உள்ள துர்க்கை அம்மனுக்கு பெண்கள் விளக்குகள் ஏற்றி வழிபட்டனர். மாலையில் மூத்த சுமங்கலிப் பெண்கள் அழைக்கப் பெற்று அவர்களுக்கு பாத பூஜை செய்யப்பட்டது. திருமணமாகாத கன்னிப் பெண்கள் கோயிலை வலம் வந்து சுமங்கலிப் பெண்களிடம் வளையல், மஞ்சள் குங்குமம் மற்றும் ரவிக்கைத் துணி ஆகியவற்றை பிரசாதமாக பெற்றுக்கொண்டனர். உலக அமைதிக்காகவும் மழை வேண்டியும் கூட்டுப் பிரார்த்தனையும் நடைபெற்றது.
பூஜையில் கலந்து கொண்ட பெண்களுக்கு மங்கள சீர்வரிசை பொருள்கள் வழங்கப்பட்டன. புஷ்பாஞ்சலி கமிட்டி சார்பில் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜை முடிவில் சமீபத்தில் காஷ்மீரில் பலியான இந்திய பாதுகாப்புப் படை வீரர்களுக்கு மோட்ச தீபம் ஏற்றி பிரார்த்தனை செய்தனர்.