மரவள்ளிக்கிழங்குக்கு ரூ.10 ஆயிரம் விலை நிர்ணயிக்க கோரிக்கை

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யும் மரவள்ளிக்

நாமக்கல் மாவட்டத்தில் பரமத்தி வேலூர் சுற்று வட்டாரப் பகுதிகளில் அறுவடை செய்யும் மரவள்ளிக் கிழங்கை இடைத்தரகர்கள் மூலம் வாங்கிச் செல்லும் சேகோ ஆலைகளின் உரிமையாளர்கள் வாரத்தில் இரண்டு நாட்கள் விடுமுறை விடுவதால், தொடர்ந்து மரவள்ளிக்கிழங்கு விலை சரிவடைந்து வருகிறது.  எனவே தமிழக அரசு மரவள்ளிக்கிழங்கு டன் ஒன்றுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்தபட்சமாக விலை நிர்ணயம் செய்ய வேண்டும் என மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம், பரமத்தி வேலூர், ஜேடர்பாளையம், கபிலர்மலை, பாகம்பாளயம், பரமத்தி, கூடச்சேரி,வசந்தபுரம், பாண்டமங்கலம் மோகனூர்,மனப்பள்ளி,பாலப்பட்ட உள்ளிட்ட பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கரில் விவசாயிகள் மரவள்ளிக் கிழங்கை பயிர் செய்துள்ளனர்.  இப் பகுதிகளில் அறுவடை செய்யப்படும் மரவள்ளிக் கிழங்குகளை இடைத்தரகர்கள் மூலம் ராசிபுரம், பேட்டை,செல்லப்பம்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள சேகோ ஆலைகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. 
ராசிபுரம், பேட்டை,செல்லப்பம்பட்டியில் செயல்படும் சேகோ ஆலைகள் வாரத்தில் தலா இரண்டு நாட்கள் விடுமுறை விடப்படுவதால், மரவள்ளி கிழங்கு அதிக அளவில் தேக்கமடைந்து விலை சரிவை சந்தித்தும், விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படுவதாகவும், ஆலைகளுக்கு ஆதரவாக இடைத்தரகர்களும் செயல்படுவதாக விவசாயிகள் தெரிவித்தனர். 
கடந்த ஆண்டு அதிக அளவில் மரவள்ளிக் கிழங்கு பயிர் செய்யப்பட்டு வந்த நிலையில், டன் ஒன்று ரூ.15 ஆயிரம் வரை விற்பனையானது.  ஆனால் தற்போது குறைந்த அளவே மரவள்ளி கிழங்கு பயிர் செய்யப்பட்டுள்ள நிலையில் டன் ஒன்று ரூ.5 ஆயிரம் முதல் 6 ஆயிரம் வரை மட்டுமே விற்பனையாகி வருகிறது.  எனவே தமிழக அரசு மரவள்ளி பயிர் செய்துள்ள விவசாயிகளின் நலன் கருதி டன் ஒன்றுக்கு குறைந்தபட்சம் ரூ.10 ஆயிரம் என விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.   மேலும் தமிழக அரசே சேகோ ஆலைகளை நிறுவி மரவள்ளி கிழங்கு விவசாயத்தை பாதுகாக்க வேண்டும் என மரவள்ளி கிழங்கு பயிர் செய்துள்ள விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com