ராசிபுரம் அருகே பஞ்சலோக சிலை எனக் கூறி முதியவரிடம் ரூ. 10 லட்சம் மோசடி: ஜோதிடர் கைது

ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் பஞ்சலோக சிலை எனக் கூறி ரூ. 10 லட்சம்

ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்த விவசாயி ஒருவரிடம் பஞ்சலோக சிலை எனக் கூறி ரூ. 10 லட்சம் மோசடி செய்த ஜோதிடரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
ராசிபுரம் அருகே சந்திரசேகரபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ராமசாமி (52), விவசாயி. இவர், விசைத்தறி கூடத்தில் பணியாற்றி வருகிறார்.
இவர், மலைவேப்பன்குட்டையைச் சேர்ந்த நாட்டு வைத்தியம் பார்க்கும் சுப்பிரமணி  (42) என்ற ஜோதிடரிடம் கால் வலிக்குச் சென்று வைத்தியம் பார்த்து வந்ததில் இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது.
அப்போது ராமசாமி எனது தோட்டத்தில் புதையல் இருப்பதாகவும், அதை எனது முன்னோர் கூறியிருப்பதாகவும் ஜோதிடரிடம் கூறியிருக்கிறார்.
இதையடுத்து ராமசாமியை ஏமாற்றி பணம் பறிக்க முடிவு செய்த ஜோசிடர் சுப்பிரமணி ரூ. 10 ஆயிரம் மதிப்பிலான பித்தளை நடராஜர் சிலையை விலைக்கு வாங்கி வந்து ராமசாமிக்குத் தெரியாமல் அவரது காட்டில் புதைத்து வைத்தார்.
பின்னர் தோட்டத்தில் புதையல் இருப்பதைக் கண்டுபிடித்துத் தருவதாக நாடகமாடி நடராஜர் சிலையைத் தோண்டி எடுத்துள்ளார். இது பஞ்சலோக சிலை என்றும் இதன் மதிப்பு ரூ. 1 கோடி என்றும் ராமசாமியிடம் கூறியுள்ளார்.
இதை உடனடியாக விற்காமல் ஓராண்டுக்கு சிறப்பு பரிகார பூஜைகள் செய்ய வேண்டும். அதற்கு பல லட்சம் ரூபாய் செலவாகும் என ஜோதிடர் கூறியுள்ளார். இதை நம்பி பல தவணைகளில் ரூ. 10 லட்சம் வரை ராமசாமி கொடுத்தார். 
இதற்காக தனது நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று பணம் கொடுத்த ராமசாமி மேலும் மேலும் பணம் தர முடியாமல், கொடுத்த பணத்தைத் திருப்பி தருமாறு ஜோதிடரிடம் கேட்டுள்ளார். ஆனால், ஜோதிடர் சுப்பிரமணி அந்தச் சிலையை வேறு சிலருக்கு விற்றுத் தருவதாக விலைபேசி வந்தார்.
இதுகுறித்த ராசிபுரம் போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. காவல் ஆய்வாளர் பி. செல்லமுத்து,  உதவி ஆய்வாளர் டி. பூபதி ஆகியோர் விசாரணை நடத்தினர். விசாரணையில் ஜோதிடர் சுப்பிரமணி, பண மோசடியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து சிலையை கைப்பற்றிய போலீஸார் சுப்பிரமணியை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com