எடைபோட தாமதம்: பருத்தி விவசாயிகள் சாலை மறியல்

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி மூட்டைகளை எடைபோட கால

நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் பருத்தி மூட்டைகளை எடைபோட கால தாமதம் ஆனதால்  விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.
நாமக்கல் வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க  வளாகத்தில் வியாழக்கிழமை தோறும் பருத்தி ஏலம் நடைபெற்று வருகிறது.
அதன்படி வியாழக்கிழமை நடந்த ஏலத்துக்கு நாமக்கல், நாமகிரிப்பேட்டை, ராசிபுரம், வேலகவுண்டம்பட்டி, புதுச்சத்திரம், எருமபட்டி, பவித்திரம், சேந்தமங்கலம் என மாவட்டம் முழுவதும் இருந்தும், அண்டை மாவட்டங்களில் இருந்தும் விவசாயிகள் 8,300 மூட்டை பருத்தியை விற்பனைக்கு கொண்டு வந்திருந்தனர்.
வழக்கமாக இந்தப் பருத்தி மூட்டைகளை பார்வையிடும் வியாபாரிகள் விலையை அதிகாரிகளிடம் குறித்து கொடுப்பார்கள். யார் அதிக விலை கோரி உள்ளார்களோ, அவர்களுக்கு பருத்தி மூட்டைகள் கொடுக்கப்படும். அதற்கான விலை பட்டியல் பிற்பகல் 3 மணி அளவில் ஒட்டப்படும்.
அதைத் தொடர்ந்து பருத்தி மூட்டைகள் எடை போடப்பட்டு, விவசாயிகளுக்கு பணம் வழங்கப்படும். வியாழக்கிழமை மாலை 6 மணி ஆகியும் பருத்தி மூட்டைகள் எடை போடப்படவில்லை. இதேபோல் விலை பட்டியலும் ஒட்டப்படவில்லை.
இதனால் ஆவேசமடைந்த விவசாயிகள் நாமக்கல்-திருச்செங்கோடு சாலையில் சங்கத்துக்கு முன் சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து அங்கு  விரைந்து வந்த போலீஸார் அவர்களை சமரசம் செய்தனர். இதையடுத்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
இதுகுறித்து விவசாயிகள் கூறியது:
புதன்கிழமை மாலையே பருத்தி மூட்டைகளை ஏலத்துக்குக் கொண்டு வந்து விட்டோம். ஆனால் இதுவரை எங்கள் பருத்தி மூட்டைகள் விற்பனையாகவில்லை. இரவில் இங்கு தங்குவதற்கும் போதுமான வசதி இல்லை. எனவே இனிவரும் காலங்களில் காலதாமதம் செய்வதை அதிகாரிகள் தவிர்க்க வேண்டும் என்றனர். 
இதையடுத்து அதிகாரிகள் வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்கு பருத்தி மூட்டைகள் எடை போடப்பட்டு, அவற்றிற்கான பணம் வழங்கப்படும் எனக் கூறியதை அடுத்து விவசாயிகள் சங்கத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றனர்.
இதுகுறித்து கூட்டுறவு சங்க அதிகாரிகள் கூறியது: தமிழக அரசின் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் பணி நடைபெற்று வருவதால், சற்று காலதாமதம் ஆகிவிட்டது. இதை அறிந்து 500 பேருக்கு டோக்கன் கொடுத்து அனுப்பிவிட்டோம் என்றனர். மேலும் விற்பனைக்கு வந்த 8,300 பருத்தி மூட்டைகள் சுமார் ரூ. 1.80 கோடி  விற்பனையானதாகவும், ஆர்.சி.எச். ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,420 முதல் ரூ. 6,439 வரையிலும், டி.சி.எச்.ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 6,400 முதல் ரூ.6,669 வரையிலும், சுரபி ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 5,890  முதல் ரூ. 6,370 வரையிலும் ஏலம் போனதாகவும் கூறினர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com