முதியவர் அடித்துக் கொலை:  மகன், மருமகள், பேரனுக்கு ஆயுள் தண்டனை

சொத்துத் தகராறில் முதியவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகன்,  மருமகள் மற்றும் பேரன் ஆகிய

சொத்துத் தகராறில் முதியவரை அடித்துக் கொலை செய்த வழக்கில் மகன்,  மருமகள் மற்றும் பேரன் ஆகிய 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டது. 
 நாமக்கல் மாவட்டம்,  ராசிபுரம் அருகே நாமகிரிப்பேட்டை வைரபாலிக்காட்டைச் சேர்ந்தவர் வரதப்பன்(71).  விவசாயி. இவருக்கு குப்பாயி, பாவாயி, நல்லாயி என 3 மனைவியர். இதில் குப்பாயி, பாவாயி இறந்து விட்டனர்.  வரதப்பனுக்கு 4 ஏக்கர் நிலம் உள்ளது. 
 கடந்த 2013 ஆம் ஆண்டில் வரதப்பனின் மூத்த மனைவியின் மகன் செல்வம் (47) என்பவருக்கு 2 ஏக்கர் பிரித்து கிரயம் செய்து வைத்தார்.  மூன்றாவது மனைவி நல்லாயியுடன் வசித்து வந்தார்.  இந்நிலையில்,  2015இல் மீதமுள்ள 2 ஏக்கர் நிலத்தை நல்லாயி மகன் நல்லதம்பி(30) என்பவருக்கு தான செட்டில்மென்ட் செய்து விட்டார். 
 இதை அறிந்த செல்வம்,  அவரது மனைவி தமிழரசி (43),  மகன் கார்த்திக் (20) ஆகியோருடன் கடந்த 2015 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 6 ஆம் தேதி இரவு நல்லதம்பி வீட்டுக்குச் சென்று தந்தை வரதப்பனிடம் தான செட்டில்மென்ட் சொத்தில் தனக்கும் பங்கு வேண்டும் எனக் கேட்டு தகராறு செய்தார். 
 அப்போது செல்வம்,  அவரது மனைவி தமிழரசி,  மகன் கார்த்திக் ஆகியோர், வரதப்பனை கட்டையால் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.  அதில் படுகாயமடைந்த வரதப்பன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 
 இதுகுறித்து நாமகிரிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து செல்வம்,  அவரது மனைவி தமிழரசி,  மகன் கார்த்திக் ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.  இந்த வழக்கு விசாரணை நாமக்கல் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி தனசேகரன் முன்னிலையில் நடைபெற்றது.  விசாரணை முடிந்த நிலையில் வெள்ளிக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது.  இதில் குற்றம் சாட்டப்பட்ட செல்வம்,  தமிழரசி, கார்த்திக் ஆகிய 3 பேருக்கும் ஆயுள் தண்டனை மற்றும் தலா ரூ.10,000 அபராதம் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com