வல்லூர் அனல் மின் நிலையத்தில் உற்பத்தி நிறுத்தத்தால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாது: அமைச்சர் பி.தங்கமணி

வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு

வல்லூர் அனல் மின் நிலையத்தில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டதால் தமிழகத்தில் மின் தட்டுப்பாடு பிரச்னை ஏற்படாது என தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி தெரிவித்தார். 
நாமக்கல் மாவட்டம் மோகனூருக்கும், கரூர் மாவட்டம்,வாங்கலுக்கும் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள உயர்மட்ட தரைவழிப் பாலத்தில் அமைக்கப்பட்ட எல்இடி மின் விளக்குகளை தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத் தீர்வைத் துறை அமைச்சர் பி.தங்கமணி,  தமிழக போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஆகியோர் வெள்ளிக்கிழமை தொடக்கி வைத்தனர் . 
தொடர்ந்து,  அமைச்சர் பி.தங்கமணி செய்தியாளர்களிடம் கூறியதாவது :  வல்லூர் அனல் மின் நிலையத்தில், தலா 500 மெகாவாட் கொண்ட மூன்று மின் உற்பத்தி அலகுகள் செயல்பட்டு வருகின்றன.  மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த மின் நிலையத்தை மூடுமாறும், மின் உற்பத்தியை நிறுத்துமாறும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
இந்த உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்வதாக, அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.  தமிழகத்தில் 1,500 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டாலும்,  அதற்கு ஈடாக மின்சாரம் கிடைக்கத் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன.  இதனால், தமிழகத்தில் மின் தட்டுப்பாடு ஏற்படாது. வல்லூர் அனல் மின் நிலையத்திலிருந்து வெளியேறும் சாம்பலை அப்புறப்படுத்த மத்திய அரசு நிறுவனம் நடவடிக்கை எடுக்கும்.  நீதிமன்ற தீர்ப்பின் ஆணை கிடைத்தவுடன் வல்லூர் அனல் மின்நிலையத்தில் மின் உற்பத்திக்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும். 
அதேபோல,  எண்ணூர் மின் நிலையத்துக்குத் தேவையான நடவடிக்கை எடுக்கப்படும். பொங்கல் பண்டிகையை பொதுமக்கள் மகிழ்ச்சியுடன் கொண்டாட தமிழக அரசு ரூ.1000 பரிசு அளித்துள்ளது.  இதை ஏற்றுக்கொள்ள முடியாத எதிர்க்கட்சிகள் அரசியல் செய்யவே அதை குறை கூறி வருகின்றன.
வரும் மக்களவைத் தேர்தலுக்கான கூட்டணி குறித்து கட்சித் தலைமை முடிவு செய்யும் என்றார்.
    இந் நிகழ்ச்சியில், நாமக்கல் மக்களவைத் தொகுதி உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம், மாவட்ட ஆட்சியர் மு.ஆசியா மரியம், நாமக்கல் சட்டப் பேரவை உறுப்பினர் கே.பி.பி.பாஸ்கர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com