சட்டவிரோத மது விற்பனை: அ.தி.மு.க.வினர் வீண்பழி சுமத்துகின்றனர்: தி.மு.க.வினர் குற்றச்சாட்டு

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கக் கோரி மனு அளித்தால் அ.தி.மு.க.வினர் வீண்பழி சுமத்துகின்றனர் என்று தி.மு.க.வினர் தெரிவித்தனர்.

சட்டவிரோத மது விற்பனையைத் தடுக்கக் கோரி மனு அளித்தால் அ.தி.மு.க.வினர் வீண்பழி சுமத்துகின்றனர் என்று தி.மு.க.வினர் தெரிவித்தனர்.
குமாரபாளையம்  நகரப் பகுதியில்  9 டாஸ்மாக் மதுக்கடைகள் உள்ளன. இக் கடைகளின் அருகில் பார்களில் சட்டவிரோதமாக 24 மணி நேரமும் மது விற்பனை நடைபெறுவதாகவும், இதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தி.மு.க. மற்றும் கூட்டணிக் கட்சிகள் சார்பில் திங்கள்கிழமை காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது. 
இதனையடுத்து தி.மு.க. நிர்வாகிகள் மதுக்கடைகளில் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், அதனைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அ.தி.மு.க. கூட்டணிக் கட்சியினர் செவ்வாய்க்கிழமை புகார் அளித்தனர். இந்த விவகாரம் குமாரபாளையம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து எதிரெதிர் கருத்துக்கள் பகிரப்பட்டன. 
தி.மு.க.வினர் மீதான குற்றச்சாட்டுகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்த திமுக மாவட்டத் துணைச் செயலரும், முன்னாள் நகர்மன்றத் தலைவருமான எஸ்.சேகர், இவ் விவகாரத்தில் கூறப்பட்ட புகார் உண்மைதான் என காளியம்மன் கோயிலில் அ.தி.மு.க.வினர் மறுக்கத் தயாரா எனக் கேள்வி எழுப்பியதோடு, அழைப்பும் விடுத்தார்.
இந்நிலையில்,  தி.மு.க. மாவட்டத் துணைச் செயலர் எஸ்.சேகர், நகரச் செயலர் கோ.வெங்கடேசன் மற்றும் கூட்டணிக் கட்சியினர் புதன்கிழமை காலை காளியம்மன் கோயிலுக்குத் திரண்டு வந்தனர். கோயில் வாயிலில் அமர்ந்திருந்ததோடு, சட்டவிரோத மதுவிற்பனைக்கு அ.தி.மு.க.வினர் துணையாக உள்ளனர். இதனைத் தடுக்கக் கோரி மனு அளித்தால் வீண்பழி சுமத்துகின்றனர். எனவே, காளியம்மன் கோயிலில், தி.மு.க.வினர் மீது  கூறப்பட்ட புகார் உண்மைதான் என அ.தி.மு.க.வினர் வந்து மறுப்புக் கூறுவதற்காக காத்திருக்கிறோம் என்றனர். 
நீண்ட நேரமாக காத்திருந்தும் அ.தி.மு.க.வினர் யாரும் வராததால் ஏமாற்றத்துடன் தி.மு.க.வினர் திரும்பினர். 
குமாரபாளையத்தில் சட்டவிரோத மது விற்பனை தொடர்பாக தி.மு.க.வினரும், அ.தி.மு.க.வினரும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளைக் கூறுவதும், புகார் அளிப்பதும் தொடர்ந்து வருவதால்
பரபரப்பு நிலவி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com